உலகாண்ட ராணி எலிசபெத் மறைவு | அரச முறைப்படி இன்று இறுதிச்சடங்கு

        17

மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு அரச வம்சத்தின் மரபுடன் இன்று நடைபெறுகிறது. ராணியின் இறுதிச்சடங்கில் உலக தலைவர்கள் ஏராளமானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்த உள்ளனர்.

பிரிட்டனில் சுமார் 70 ஆண்டு காலம் முடியாட்சி செலுத்தி வந்த ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 9ஆம் தேதி ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் எஸ்டேட்டில் காலமானார். ராணியின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனை வளாகத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ள ராணியின் உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ராணியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக உலக தலைவர்கள் ஏராளமானோர் லண்டனில் முகாமிட்டுள்ளனர். லண்டன் சென்றுள்ள இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ராணியின் உடலுக்கு ஞாயிற்றுக்கிழமையன்று அஞ்சலி செலுத்தினார்.

அதேபோல், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது துணைவியாருடன் வந்து ராணி எலிசெபெத்துக்கு அஞ்சலி செலுத்தினார்.காலை 6 மணியுடன் வெஸ்ட்மினஸ்டர் வளாகம் மூடப்பட்டு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்படும். மாலை 3 மணியளவில் ராயல் கடற்படையின் வாகனத்தில் ராணியின் உடல் வைக்கப்ப்ட்டு அருகிலுள்ள வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படும். மூன்றாம் மன்னர் சார்லஸ் மற்றும் இளவரசர்கள் வில்லியம்ஸ், ஹாரி உள்ளிட்டோர் ராணியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பர்.

வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்தில் நடக்கும் ராணியின் இறுதிச்சடங்கில் உலகத்தலைவர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர். பேராலயத்தில் பிரட்டன் பிரதமர் உரை நிகழ்த்துவார் என எதிர்பாரக்கப்படுகிறது. ராணியின் உடலுக்கு பேராயர் டெவிட் ஹோய்லே இறுதிச்சடங்கை நடத்துவார். அதன்பிறகு பிரிட்டன் முழுவதும் 2 நிமிடம் மவுன அஞ்சலி அனுசரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் விமான சேவைக்கு கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்பிறகு ராணியின் உடல் வின்ட்சர் கோட்டைக்கு வாகனம் மூலம் கொண்டு செல்லப்படும். வழிநெடுகிலும் நிறுத்தப்படும் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள், ஒவ்வொரு நிமிடத்திற்கு ஒருமுறை துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணிக்கு மரியாதை செலுத்துவர்.

இந்த ஊர்வலத்தில் அரச குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொள்வார்கள். அதன் பிறகு, செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் ராணியின் உடலுக்கு இறுதி சேவை வழங்கிய பின்னர், செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்திற்குள் அமைந்துள்ள அரசர் ஆறாம் ஜார்ஜ் நினைவு தேவாலயத்தில் கணவர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு பக்கத்தில் ராணியின் உடல் அடக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ராணியின் இறுதிச்சடங்கிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இமானுவேல் மேக்ரான் போன்ற தலைவர்கள் மட்டுமே அவர்களது சொந்த வாகனங்களில் வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ராணியின் இறுதிச்சடங்கிற்கு ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு பக்கிம்ஹாம் அரண்மனை அழைப்பு விடுக்கவில்லை. உக்ரைன் மீதான ரஷ்ய படைபெயடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து புதினுக்கு அழைப்பு விடுக்க மறுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஆப்கானிஸ்தான், சிரியா, வெனிசுலா, மியான்மர் உள்ளிட்ட நாடுகளுக்கும் ராணியின் இறுதி சடங்கில் பங்கேற்ற அழைப்பு விடுக்கப்படவில்லை.
 


Share :