72 வயது முதியவருக்கு காதணி விழா |அசத்திய பேரப்பிள்ளைகள்

        18

நாமக்கல் அருகே 72 வயது முதியவருக்கு அவரது பேரப்பிள்ளைகள் சேர்ந்து காதணி விழா நடத்தி அழகு பார்த்த சம்பவம் அக்கிராமத்து மக்களை கண்கவரச் செய்துள்ளது.

சொந்தம், பந்தம், பாசம் என்றால் என்னவென்றே தெரியாமல், நவீன கால வாழ்க்கைக்கு தயாராவதே தற்போதைய டிரெண்ட் என வாழ்ந்து வரும் சில இளைஞர்களுக்கு மத்தியில், தங்களது தாத்தாவுக்கு காதணி விழா நடத்தி அழகு பார்த்த பேரப்பிள்ளைகளின் செயல் காண்போரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுல்தான் பேட்டையை சேர்ந்தவர் வரதராஜன். 72 வயதான இவருக்கு நான்கு பெண்கள், ஒரு ஆண் என 5 பிள்ளைகள் உள்ளனர். இவரது மனைவி கடந்த 2019ம் ஆண்டு உயிரிழந்த நிலையில், தனது மகன் வீட்டில் வசித்து வரும் வரதராஜன், டி.வி.சுந்தரம் நிறுவனத்தில் 28 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

காலங்கள் ஓடிய நிலையில், தற்போது இவருக்கு 5 பேரன்களும், 3 பேத்திகளும் உள்ளனர். இவர்கள் தங்களது தாத்தாவிடம் ஏன் இதுவரை நீங்கள் காது குத்திக்கொள்ளவில்லை என கேட்டுள்ளனர். அதற்கு, குழந்தை பருவத்தில் குலதெய்வ கோவிலுக்கு காது குத்த சென்றபோது, எதிர்பாராத விதமாக விழாவிற்கு கொண்டு சென்ற தங்க தோடுகள், புது துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போனதாக மனவேதனையுடன் கூறியுள்ளார்.

இதையடுத்து, தாத்தாவுக்கு எப்படியாவது காதணி விழா நடத்தியே ஆக வேண்டும் என நினைத்த பேரன், பேத்திகள், அதனை சிறப்பாகவும் நடத்தி முடித்துள்ளனர். மேலும், தங்களது தாத்தாவுக்கு சீர் கொடுத்தும் அவர்கள் மகிழ்ந்தனர்.
 


Share :