ரூ.7,70,000 டெபாசிட் - வாரம் ரூ.1 லட்சம் ரூ.1,000 கோடி மோசடி புகார்

        20

ஒசூரில் AK TRADERS யுனிவர் டிஜிட்டல் காயின் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களிடம் இருந்து சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் 8 இடங்களில் ஆய்வு மேற்கொண்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை பறிமுதல் செய்துள்ளனர்.

நாள்தோறும் உழைத்து சேமித்த பணத்தை கவர்ச்சியான விளம்பரங்களை நம்பி அதில் சொலுத்துபவர்கள் இருக்கும் வரைக்கும் இது போன்ற ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டு தான் இருப்பார்கள் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணமாகியுள்ளது.

ஒசூரை சேர்ந்த அருண்குமார் என்பவர் ராமகிருஷ்ணா நகரில் AK TRADERS யுனிவர் டிஜிட்டல் காயின் என்ற நிறுவனத்தை கடந்த 2 ஆண்டுகளாக நடத்தி வந்துள்ளார். இந்நிறுவனத்தில் 7 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்தால் வாரம் ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும் என கவர்ச்சிகரமான விளம்பரம் செய்யப்பட்டது.

இதனை நம்பி முன்னாள் இராணுவ வீரர்களான, நந்தகுமார், சங்கர், பிரகாஷ், சீனிவாசன் மற்றும் வேலன் ஆகிய 5 பேரும் இந்த நிறுவனத்தில் முகவர்களாக சேர்ந்தனர். பின்னர் இந்த திட்டத்தில் அதிகளவு ஆட்களை சேர்த்தால் அதிக கமிஷன் கிடைக்கும் என கூறியதை தொடர்ந்து, இவர்கள் 5 பேரும் தெரிந்தவர்களையும் இத்திட்டத்தில் சேர்த்துள்ளனர்.

இதையடுத்து 5 முகவர்களையும், AK TRADERS நிறுவனத்தின் சார்பில் கோவா, தாய்லாந்து என சுற்றுலாவிற்கு அழைத்து சென்று அழுகு பார்த்ததுடன், இன்னோவா கார் மற்றும் வீடுகளை அருண்குமார் பரிசாக கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அந்த நிறுவனத்தை முழுமையாக நம்பிய முகவர்கள் தங்களுக்கு தெரிந்த முன்னாள் இராணுவ வீரர்களை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்துள்ளனர். பின்னர் முதலீட்டாளர்கள் அனைவருக்கும் சிறிய அளவிலான லாபத்தை வழங்கி வந்த AK TRADERS நிறுவனம், கடந்த சில மாதங்களாக அதனை வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் சந்தேகமடைந்த முதலீட்டாளர்கள் AK TRADERS நிறுவனத்திற்கு நேரில் சென்று பார்த்த போது பூட்டி கிடந்துள்ளது. இதையடுத்து பதறிப்போன 210 பேர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இதை தொடர்ந்து AK TRADERS நிறுவனத்திற்கு சொந்தமான 8 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது முகவர்களான பிரகாஷ் வீட்டில் இருந்து 12 சவரன் நகை மற்றும் சீனிவாசன் வீட்டில் இருந்து 50 லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இனோவா கார் உள்ளிட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இருவரையும் கைது செய்த அதிகாரிகள், தலைமறைவாக உள்ள AK TRADERS நிறுவன உரிமையாளர் அருண்குமார் உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
 


Share :