அரசியல�

கொடநாடு வழக்கு - இ.பி.எஸ்.க்கு செக்.! அப்ரூவராகிய EX.MLA ஆறுகுட்டி

        17

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாகவும், விரைவில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பரபரப்பை கிளப்பியிருக்கிறார். சமீபத்தில், அதிமுகவில் இருந்து திமுகவுக்கு மாறிய ஆறுகுட்டி அப்ரூவராக மாறி கார் ஓட்டுனர் கனகராஜ் வசம் ஒப்படைக்கப்பட்ட பணம், பிறகு அவரின் மர்ம மரணம் குறித்து எல்லாம் உண்மையெல்லாம் கக்கிவிட்டதாக சொல்லப்படும் நிலையில், இதன் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு புது தலைவலி உருவாகியுள்ளது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை இறுதிகட்டத்தை எட்டியிருப்பதாக பரபரப்பை கிளப்பியிருக்கிறார் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி.

திமுக ஆட்சிக்கு வந்ததும் கோடநாடு வழக்கு சூடுபிடித்தது. விரைவில் வழக்கின் உண்மைகள் எல்லாம் வெளிச்சத்துக்கு வரும் என அனைவரும் எதிர்பார்த்த சமயத்தில் தான் திடீரென வழக்கம்போல் அந்த பரபரப்பு அப்படியே அமுங்கிப் போனது. அதற்கு பிறகு அத்திபூத்தாற் போல் அவ்வப்போது மட்டும் கோடநாடு வழக்கில் விசாரணை என செய்திகள் வந்தன. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் கிடைக்காதால் தான் ஆரம்பத்தில் கோடநாடு வழக்கில் திமுக காட்டிய தீவிரம் பின்னாளில் குறைந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தான், கோடநாடு வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக திமுக கூறிவருகிறது.

இதற்கான பின்னணி குறித்து விசாரித்த போது, சமீபத்தில் அதிமுகவில் முக்கிய நபராக இருந்து திமுகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி தான் என்கிறார்கள். திமுகவில் இணைந்த ஆறுகுட்டி கோடநாடு வழக்கு குறித்த பல உண்மைகளை கக்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த ஆதாரங்கள் எல்லாம் அதிமுகவின் முக்கிய புள்ளிகளுக்கு முழுக்க முழுக்க எதிராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவராக இருந்த ஆறுகுட்டி திடீரென திமுகவில் இணைந்ததற்கும் கோடநாடு வழக்கில் சிக்காமல் தப்பிக்க வேண்டும் என்பதற்காக தான் என கூறுகிறார்கள். இது குறித்து கேட்க ஆறுகுட்டியை தொடர்பு கொண்ட போது, பேட்டி கொடுக்க வேண்டும் என்றால் கட்சித் தலைமையிடம் கேட்டுவிட்டு தான் பேச முடியும் எனக் கூறி நழுவிவிட்டார்.

இதுதவிர்த்து, பணப்பரிமாற்றம், செல்போன் கால்ஸ்களை வைத்து போலீஸ் நடத்திய விசாரணையிலும் முக்கியமான துப்பு கிடைத்திருக்கிறதாம்... ஆகையால், அடுத்த சில நாட்களில் கோடநாடு கொலை விவகாரத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புபடுத்தி முக்கியமான திடுக்கிடும் தகவல் அம்பலத்துக்கு வரும் என கூறப்படுகிறது. மேலும், கோடநாடு சம்பவத்திற்கு முன்பாக சேலத்தில் அதிமுகவின் முக்கிய பிரமுகரின் வீட்டில் ரகசிய ஆலோசனை நடந்ததாகவும், அப்போது, அந்த ரகசிய மீட்டிங்கில் ஓட்டுநர் கனகராஜிடம் பொறுப்பை ஒப்படைத்து அட்வான்ஸாக 5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாகவும் தகவல் கசிந்துள்ளது.

அத்தோடு, சம்பவம் நடந்த பிறகும் முக்கிய மீட்டிங் நடந்துள்ளது. அப்போது, கார் ஓட்டுநர் கனகராஜ் உண்மையை உளறத் தொடங்கியது தான் அவருக்கும் எமனாக அமைந்தது எனவும் சொல்கிறார்கள். கனகராஜை விட்டால் விஷயம் எல்லாம் வெளியில் தெரிந்து பிரச்சனையாகிவிடும் என்று தான் அவர் கொலை செய்யப்பட்டு, விபத்து போல் சித்தரிக்கப்பட்டது என பல அதிர்ச்சிகரமான தகவல்களை ஆறுகுட்டி விசாரணையில் சொல்லியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே அதிமுக உட்கட்சி பூசலால் பலகட்ட பிரச்சனைக்கு பிறகு அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக ஆகியிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு, அப்ரூவர் ஆன ஆறுகுட்டியால் புது தலைவலி உருவாகியுள்ளது.


Share :