எலிசபெத்தின் இறுதி ஊர்வலம் | முர்மு, ஜோபைடன் பங்கேற்பு

        15

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்தில் நடைபெற்றது. ராணுவ வீரர்கள் புடைசூழ, பிரிட்டனின் பாரம்பரிய இசையுடன் ராணியின் உடல் கொண்டு செல்லப்பட்டு பிராத்தனை நடைபெற்றது. ராணியின் இறுதி ஊர்வலத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அமெரிக்க அதிபர் ஜோபைடன் உள்ளிட்ட உலக தலைவர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். விண்ட்சர் கோட்டைக்கு எடுத்துச் செல்லும் வழியில் கூடியிருந்த லட்சக்கணக்கான மக்கள் ராணி எலிசபெத்திற்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

மறைந்த இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி ஊர்வலம், வெஸ்ட் மினிஸ்டர் அரண்மனை வளாகத்தில் இருந்து துவங்கியது. ராயல் கடற்படையின் வாகனத்தில் ராணியின் உடல் அருகிலுள்ள வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

மூன்றாம் மன்னர் சார்லஸ், இளவரசர்கள் வில்லியம்ஸ், ஹாரி மற்றும் அரச குடும்பத்தினர் ராணியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்..

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அமெரிக்க அதிபர் ஜோபைடன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் இறுதி அஞ்சலியில் பங்கேற்றனர்.

ராணுவ வீரர்கள் புடைசூழ, பிரிட்டனின் பாரம்பரிய இசையுடன் வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்திற்கு ராணியின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு பிரார்த்தனை நடைபெற்றது.சவப்பெட்டியின் மீது கோஹினூர் வைரம் பதித்த கிரீடம் வைக்கப்பட்டு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

அதன்பின்னர், வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தில் இருந்து வெலிங்டன் ஆர்ச் பகுதிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட ராணியின் உடலுக்கு அரச குடும்பத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தினர். லண்டன் நகர வீதிகளில் திரண்டு இருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் ராணி எலிசபெத்திற்கு கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து, விண்ட்சர் கோட்டைக்கு வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட ராணியின் உடலுக்கு சாலையின் இருபுறத்திலும் அலைகடலென திரண்டிருந்த மக்கள் இறுதி மரியாதை செலுத்தினர். செயிண்ட் ஜார்ஜ் தேவாலயத்திற்கு கொண்டு செல்லப்படும் ராணியின் உடல், அவரது கணவரின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது.


Share :