சைபர் க்ரைம் குற்றவாளிகளுக்கு சங்கு.! வெளிமாநிலத்தவரும் தப்ப முடியாது.!

        14

முகத்தை வெளிப்படுத்தாமல் சாமார்த்தியமாக செய்யக்கூடிய சைபர் குற்றங்கள் பலரது வாழ்க்கையை சகட்டு மேனிக்கு நாசம் செய்து வருகின்றன... அதிலும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களே பெரும்பாலும் சைபர் குற்றங்களில் ஈடுபடுவதால் அவர்களைப் பிடிப்பது என்பது போலீசாருக்கு பெரும் சவாலாகவே இருந்தது... இந்நிலையில் வெளிமாநில குற்றவாளிகளை மடக்கிப் பிடிக்க இந்தியா முழுவதும் உள்ள போலீசாரை ஒருங்கிணைக்கும் வகையில் வெப்போர்டல் துவக்கப்பட உள்ளது.

இங்கே அங்கே என்றில்லாமல் இணையதளம் மூலம் நடைபெறும் குற்றங்கள் எங்கெங்கும் பெருகி பலரது வாழ்க்கையை நாசமாக்கி வருகிறது... இந்தக் குற்றங்களை தடுப்பு எப்படி?கைது செய்யப்படும் குற்றவாளிகள் நேக்காக தப்பிப்பதை தடுப்பது என்பது குறித்து மாநில சைபர் குற்ற தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

சென்னை அசோக்நகரில் உள்ள மாநில இணைய வழி குற்ற தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை சைபர் க்ரைம் தொடர்பாக 62 ஆயிரத்து 767 புகார்கள் வந்ததாகக் கூறினார். இதில் தொடர்புடைய 486 குற்றவாளிகளை சைபர் க்ரைம் போலீசார், கடுமையான போராட்டத்திற்கு பிறகு கைது செய்ததாகத் தெரிவித்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளில், 175 கோடியே 19 லட்சம் ரூபாய் வரை, மக்கள் பறிகொடுத்ததாகவும், அதில் 9 கோடியே 8 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டு உரியவர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறினார்.

30 சதவீத புகார்கள் இணைய வழி மோசடியில் பணத்தை இழந்தவர்களிடம் இருந்தே வந்துள்ளன என்றும் மாநில சைபர் குற்ற தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்தார். இணையவழி மோசடியில் பணத்தை இழந்தோர், உதவி எண்ணான 1930 வில் உடனடியாக தெரிவிக்கலாம். அல்லது www.cybercrime.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொண்டு கூறலாம். இதன்மூலம் இழந்த பணத்தை மீட்டுத் தர தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

இணைய வழி குற்றங்களில் ஈடுபடும் நபர்களில், 90 சதவீதத்தனர், வெளிமாநிலம் அல்லது வெளிநாட்டில் இருக்கின்றனர். எனவே குற்றவாளிகளை நெருங்குவதிலும் பணத்தை மீட்பதிலும் போலீசாருக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது.. குறிப்பாக வெளிமாநிலங்களில் உள்ள சைபர் குற்றவாளிகளை எளிதாக பிடிக்கும் வகையில் இந்தியா முழுவதும் உள்ள போலீசாரை ஒருங்கிணைக்கும் வகையில், வெப்போர்டல் எனப்படும் இணையதள முகப்பு துவக்கப்பட உள்ளது... அந்தந்த மாநில போலீசார் உதவியுடன், இணையவழி குற்றவாளிகளை எளிதில் நெருங்கலாம் என்றும் மாநில சைபர் குற்ற தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.


 


Share :