அரசியல�

மனைவிக்கும் வரி போடுவீங்களா? | ராஜேந்திர பாலாஜி டென்சன்

        18

நின்றால் வரி....நடந்தால் வரி.....உக்கார்ந்தால் வரி....என குலேபகாவலி படத்தில் வருவது போல் திமுக ஆட்சி இருக்கிறது என்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இனிமேல் மனைவிக்கு வரி போடுவது ஒன்று தான் பாக்கி என கடுமையாக விமர்சித்துள்ளார். அத்தோடு ராஜபாளையம் நகர்மன்ற தலைவரின் கணவர் மரணத்தில் முக்கிய பிரமுகர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக போகிற போக்கில் ஒரு குண்டைத்தூக்கிபோட்டுவிட்டு சென்றார்.

வழக்கு...கைது... போலீஸ்....நீதிமன்றம்னு சில நாட்கள் வேறு உலகத்தில் இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, மீண்டும் அரசியல் களத்தில் அதிரடி காட்டி வருகிறார். ஆட்சியில் இருந்த போது எதிர்க்கட்சியாக இருந்த திமுகவை கடுமையாக விமர்சித்தவர்களில் ஒருவரான ராஜேந்திரபாலாஜி மீண்டும் அதே பாணியை கையில் எடுத்துள்ளார். அப்படி திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறிய காட்சிகள் தான் இவை....

விருதுநகரில் நடைபெற்ற அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விரட்டி விரட்டி துப்பாக்கி முனையில் தன்னை கைது செய்ததாகவும், ஆனாலுமே தாம் பயப்படாமல் இருப்பதாகவும் கூறினார்.

மேலும், தன் மீது டெல்லியில் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறிய ராஜேந்திரபாலாஜி, நாள் முழுவதும் போலீஸ் தன்னை கண்காணித்து வருவதாக கூறினார்.

கூட்டத்திற்கு வந்து கொண்டிருந்த போது, ஒருவர் ஓடிவந்து தன்னை தடுத்து நிறுத்தி ராஜபாளையம் நகர்மன்ற தலைவரின் கணவரை பல கோடி ரூபாய் பணம் கேட்டு கொலை செய்துவிட்டார்கள் என்று சொன்னதாகவும், அவரது இறப்புக்கு ராஜப்பாளையத்தைச் சேர்ந்த முக்கியமான அரசியல் பிரமுகர் தான் காரணம் என குண்டை தூக்கி போட்டார்.

இங்க இருந்த கிணத்த காணோம் என்ற வடிவேலு பாணியில், தேவதானம் அருகே கண்மாய்கள் எல்லாம் காணாமல் போய் வருவதாகவும், அரசு விதிக்கும் வரி இல்லாமல் திமுகவினரும் தனியாக அடாவடியாக வரி வசூல் செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.

கலைஞர் கருணாநிதி ஆட்சியில் எட்டு மணி நேரம் தடை என்றால், தற்போதைய ஆட்சியில் 10 மணி நேரம் மின் தடை ஏற்படுவதாக கூறிய ராஜேந்திர பாலாஜி, விவசாய மின் மோட்டார் விலை 15ஆயிரத்தில் இருந்து இருமடங்காக 30ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது என்றார். இப்படி அறிவுப்பூர்மாக விலைவாசி உயர்வு, மின் தடைனு பேசிக் கொண்டிருந்த ராஜேந்திரபாலாஜி டக்குனு வழக்கமான டாப்பிக்குக்கு வந்தார்.

டாஸ்மாக் கடையில் கவர்ன்மெண்ட் சரக்கு....கரூர் சரக்கு என இரண்டு சரக்குகள் கிடைப்பதாக கூறிய ராஜேந்திரபாலாஜி, தற்போதெல்லாம் கட்டிங் அடித்தாலும் போதை ஏறமாட்டாங்குதுனு வருத்தப்பட்டார். ஆனாலும், விலை மட்டும் உயர்ந்து கொண்டே செல்கிறது என வேதனைப்பட்டார்.

தளவாய்புரம் பகுதியில் செயல்படும் அரிசி ஆலைகளில் திமுகவினர் மாதந்தோறும் கமிஷன் கேட்டு நச்சரிப்பதாகவும், அரிசி ஆலை அதிபர்கள் எல்லாம் தன்னிடம் புலம்புவதாகவும் கூறினார். மேலும், நெல்கொள்முதல் நிலையங்களிலும் ஒரு மூட்டைக்கு 40 ரூபாய் விவசாயிகளிடம் லஞ்சம் வாங்குவதாகவும், நியாயவிலை கடை ஊழியர்களையும் திமுகவினர் மிரட்டி பணம் பெறுவதாகவும் குற்றம்சாட்டினார்.

நின்றால் வரி...நடந்தால் வரி.... உக்கார்ந்தால் வரி என்ற ராஜேந்திரபாலாஜி... இனிமேல் மனைவிக்கு வரி போடுவது மட்டும் தான் பாக்கி என காட்டமாக பேசியதோடு, கடைசியில் அனைத்து மத கடவுள்களையும் வணங்குவதால் தான் பல சிக்கல்களுக்கு பிறகும் அரசியல் நிலைத்திருப்பதாக பக்தியோடு உரையை முடித்தார்.


Share :