பேசுனதே பேசாதீங்க தலைவரே | திண்டுக்கல் சீனிவாசனுக்கு பல்பு

        22

தேனி ஆண்டிப்பட்டியில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் எழுச்சியுரையாற்ற தொடங்கிய போது, சும்மா பேசுனதே....பேசாதீங்கனு நிர்வாகிகள் கோரஸாக பல்பு கொடுத்ததால் அவர் டென்சன் ஆனார். பேச்சை கேட்க விருப்பம் இல்லையென்றால் கூட்டத்தை விட்டு எழுந்து செல்லுங்கள் என்று முதலில் கடிந்து கொண்ட திண்டுக்கல் சீனிவாசன், கடைசியில் என்னையை பேசவிடுங்கப்பானு கெஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

மேடையில் பேசும் போதெல்லாம் ஏதாவது சர்ச்சையாக பேசி நிர்வாகிகளை கவர்ந்து வந்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு, பேசுனதே... பேசாதீங்கனு நிர்வாகிகள் பல்பு கொடுத்த பரிதாபம் ஆண்டிப்பட்டியில் அரங்கேறியுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எழுச்சியுரை ஆற்ற மைக்கை பிடித்து பேசத் தொடங்கினார். தாம் பேசுவதை எல்லாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் எனக்கூறி திண்டுக்கல் சீனிவாசன் உரையை தொடங்கும் போதே, ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சித்து பேசுங்கள் என கீழே இருந்த நிர்வாகி ஒருவர் அட்வைஸ் கொடுத்தார்.

அவரை சமாதானப்படுத்தி, ஒட்டு மொத்த தமிழகத்திலேயே இதுவரை யாருமே சொல்லாத விஷயத்தை தாம் சொல்லப்போகிறேன் என திண்டுக்கல் சீனிவாசன் பில்டப் கொடுத்துக் கொண்டிருக்க, மற்றொரு நிர்வாகி பேசுனதே பேசாதீங்க.... எல்லாம் கேட்டு கேட்டு சலிச்சு போச்சுனு நோஸ்கட் கொடுத்தார். இதனால், டென்சன் ஆன திண்டுக்கல் சீனிவாசன் பிடித்தால் இருங்கள்....இல்லையென்றால் கூட்டத்தை விட்டு வெளியே போங்கள் என கடிந்து கொண்டார்.

எனக்கு எதிரிகள் வெளியில் இல்லை.... கூடவே தான் வச்சிருக்கேன் என்ற சினிமா வசனம் போல, ஒருவழியாக அதிமுக பொதுக்குழு விவகாரம் குறித்து திண்டுக்கல் சீனிவாசன் பேசத் தொடங்கிய போது ஏங்க பழசை பேசாதீங்கன்னு சொல்றோம், திருப்பி திருப்பி அதையே பேசினால் எப்படி என ஒருவர் ஆக்ரோஷம் காட்டி, மேடைக்கு கீழே கூச்சல் போட, அந்த கூச்சல் வாக்குவாதமாக மாறியது.

உங்க மத்தியில உயிர் வாழுறதே பெரிய விஷயம் தான் என நினைத்த திண்டுக்கல் சீனிவாசன் சொல்லி சொல்லி பார்த்துவிட்டு, கோபத்தில் எழுச்சியுரை ஆற்றாமல் எந்திருச்ச இடத்திலேயே சென்று அமர்ந்தார்.

சரி பொதுக்குழு தான் செலுப்பு எடுக்கல...இப்போ நீட்டுல இருந்து போவோம்னு... நீட் தேர்வை திமுகவால் ரத்து செய்ய முடியாதுனு திண்டுக்கல் சீனிவாசன் பேச ஆரம்பிக்க, கூட்டத்தின் நடுவில் இருந்து எழுந்த ஒருவர், பெருத்த குரலில் நீட் தேர்வெல்லாம் இருக்கட்டும், முதலில் தேனி மாவட்டத்துக்கு அதிமுக மாவட்டச் செயலாளரை போடுங்க என ஆவேசம் காட்டினார். அட யாருய்யா நீங்க, சும்மா கசகசன்னு பேசிக்கிட்டே இருக்கீங்க என தனது அதிருப்தியை வெளிப்படுத்திய திண்டுக்கல் சீனிவாசன் மீண்டும் தனது இருக்கைக்கு சென்று அமர்ந்துகொண்டார்.

இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் தனியா இருக்கும் போது சொல்லுங்கள் என அந்த நிர்வாகியை பதமா பார்த்து சமாதானப்படுத்திய திண்டுக்கல் சீனிவாசன், வாட்ட சாட்டமாக பெரிய மீசை வைத்துக் கொண்டு இப்படி கூட்டத்திற்கு நடுவில் எழுந்து பேசினால் எதிரிகள் என்ன நினைப்பார்கள் என்றார்.

2 முறை கோபித்துக் கொண்டு தனது பேச்சை பாதியிலேயே முடித்துக் கொண்ட திண்டுக்கல் சீனிவாசனை, பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த நிர்வாகி சமாதானம் செய்து மூன்றாவது முறையாக பேச வைத்தார். மொத்தத்தில் திண்டுக்கல் சீனிவாசனை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் அவரிடமே நேருக்கு நேர் அதிமுக நிர்வாகிகள் எகிறிய நிகழ்வு அரங்கேறியது.


Share :