தமிழ�நாட�

"கட்சியாவது, கொடியாவது"அதிரடி காட்டிய அதிகாரிகள்!

        20

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற வந்த அதிகாரிகளை கட்சிக் கொடியைக் காண்பித்து வன்னியர் சங்க மாவட்டத் தலைவர் மிரட்டிய நிலையில், அதிகாரிகள் பிடிகொடுக்காமல் துணிச்சலுடன் கடையை இடிக்க தொடங்கியதால், வேறு வழியின்றி கடையை தாமே அகற்றுவதாக ஒப்புக் கொண்டார்.

சூளகிரியில் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக அரசிற்கு சொந்தமான இடத்தில் வன்னியர் சங்க கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் ஆறுமுகம் என்பவர் இரண்டு கடைகளை அமைத்து பிளாஸ்டிக், இரும்பு சேமிப்பு கிடங்காக பயன்படுத்தி வந்தார். அந்தக் கடைகளை அகற்றுமாறு வருவாய்த்துறை சார்பில் கடந்த ஜூலை மாதமே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் கால அவகாசம் முடிந்த நிலையிலும் ஆறுமுகம் கடைகளை அகற்றவில்லை.

இந்த நிலையில் செவ்வாய்கிழமை ஜேசிபி இயந்திரத்துடன் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றச் சென்றுள்ளனர். அதிகாரிகள் வருவதை முன்கூட்டியே அறிந்த ஆறுமுகம், அவர்களை மிரட்டுவதற்காக சம்மந்தப்பட்ட இடத்தில் பாமக கொடிக்கம்பங்களையும் வன்னியர் சங்கக் கொடிக் கம்பத்தையும் நட்டு வைத்திருந்தார். அதிகாரிகள் வந்ததும் அங்கு தமது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

எதற்கும் பிடிகொடுக்காத அதிகாரிகள் நிலத்தை மீட்பதில் உறுதியாக இருந்தனர். 80க்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு கடைகளை அதிகாரிகள் இடிக்கத் தொடங்கினர்.

இனியும் தங்களது பருப்பு வேகாது எனத் தெரிந்துகொண்ட ஆறுமுகம், வேறு வழியின்றி கடைகளை தாங்களே அகற்றுவதாகவும் ஒரு நாள் அவகாசம் கொடுக்குமாறும் கோரிக்கை வைத்தார். அதிகாரிகளும் அவகாசம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றனர்.

கட்சி மிரட்டல், சாதி சங்கங்களின் மிரட்டல் ஆகியவற்றுக்கு அஞ்சாமல் இதேபோன்று அனைத்து அதிகாரிகளும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு...


Share :