சினிமா

"யோவ் நீ உட்காருய்யா".! வறுத்தெடுத்த கே.ராஜன்

        22

சென்னையில் நடைபெற்ற திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் பேசிக் கொண்டிருக்கும்போது குறுக்கிட்ட நடிகர் சென்றாயனை அவர் ஆத்திரத்தில் வறுத்தெடுத்த சம்பவம் அரங்கேறியது. நடிகர்கள் சுகம் காண்பவர்கள் என்றும் அவர்களை வைத்து படம் தயாரிப்பாளர்கள் பாவம் செய்தவர்கள் என்றும் கே.ராஜன் ஆவேசமாகக் கூறினார்.

நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிப்பில், இசையமைப்பாளர் ராஜேஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள “லோக்கல் சரக்கு” என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா,சென்னையில் நடைபெற்றது.

சர்ச்சைப் பேச்சுகளுக்கு சொந்கக்காரரான சினிமா தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர்கள் ராதாரவி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மேடையில் பேசிக் கொண்டிருந்த கே.ராஜன், வழக்கம்போல் நடிகர், நடிகையரை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தார்.

பேச்சின் இடையே படத்தின் தயாரிப்பாளர் ராஜேஷைப் பார்த்து, இதற்கு மேல் நீங்கள் படம் தயாரிக்காதீர்கள் எனக் கூறிய கே.ராஜன், தயாரிப்பாளர்களை யாரும் மதிப்பது இல்லை என்றும் படம் எடுப்பது ஒரு டார்ச்சர் என்றும் கூறினார்.

அதனைக் கேட்டு எழுந்து வந்த நடிகர் சென்றாயன், தயாரிப்பாளர்கள் படம் எடுத்தால்தான் தங்களுக்கு வேலை என்றார். இதனால் கடுப்பான கே.ராஜன், "உங்களுக்கு வேற வேலை நாங்க வாங்கித் தரோம், அவரை வேலை இல்லாமல் ஆக்கிடாத போய் உட்காரு" என்று ஆவேசமாகக் கூறினார். நடிகர்கள் சுகம் காண்பவர்கள் என்றும் படம் எடுப்பது எவ்வளவு டார்ச்சர் என்று எங்களுக்குத் தெரியும் என்றும் கூறினார்.

சென்றாயனை மேற்கொண்டு பேசவிடாமல் கே.ராஜன் ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்ததால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. தாம் பேசும்போது யாரும் டிஸ்டர்ப் செய்யக் கூடாது என்றும் தாமே பலபேரை டிஸ்டர்ப் செய்யும் ஆள் என்றும் அவர் கூறினார்.


Share :