தமிழ�நாட�

இரவில் ஆடல் பாடல்.! பகலில் பசியாற்றும் சேவை!

        19

இரவில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தி வரும் திருவாரூரை சேர்ந்த தம்பதி, பகலில் ஓய்வு எடுக்காமல் நூற்றுக்கணக்கான மக்களின் வயிற்று பசியை போக்கி வருகின்றனர். கடந்த பல வருடங்களாக அன்னதானம் என்ற அளப்பரிய சேவை செய்து வரும் இந்த தம்பதியை பற்றி விரிவாக காணலாம்.

சகமனிதன் உயிருக்காகவும் உணவுக்காகவும் போராடி வரும் நிலையில், அவர்களின் பசியைப் போக்கி உயிர் காக்க உதவுகின்ற பெருந்தொண்டு கடவுள் வழிபாட்டை விட சிறந்தது என்பார்கள். அத்தகைய செயலை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செய்து வருகிறது ஒரு தம்பதி.

திருவாரூர் மாவட்டம் சீனிவாசபுரத்தை சேர்ந்த குமார், அவரது மனைவி நதியா ஆகிய இருவரும் நாட்டுப்புற இசைக் கலைஞர்கள். பல்வேறு இடங்களில் கிராமிய கலை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் இவர்கள், வள்ளலார் மீது கொண்ட பற்றால் ஏழை மக்களின் பசியைப் போக்க, தங்களது வருமானத்தின் ஒருபகுதியில் இருவரும் தினந்தோறும் இலவச உணவு வழங்கி வருகின்றனர். இந்த சேவையை பார்த்து வியந்த மக்கள் பலரும், தங்களது பிறந்த நாள் போன்ற நாட்களில் இந்த தம்பதிக்கு நன்கொடையாக பணம் கொடுத்து உதவி வருகின்றனர்.

இரவு முழுவதும் ஆடிப்பாடி களைத்து விடியற்காலையில் வீட்டிற்கு வரும் தம்பதி, நன்றாக ஓய்வு கூட எடுக்காமல் 300 பேருக்கு தேவையான மதிய உணவை தயார் செய்கின்றனர். அதனை வாகனத்தில் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்கு கொண்டு செல்ல, அதற்கு முன்னதாக தற்காலிக கூரைக் கொட்டகையில் மக்கள் நீண்ட வரிசையில் உணவுக்காக காத்திருக்கின்றனர். இதனையடுத்து அன்றைய தினம் அன்னதானத்திற்காக பணம் கொடுத்து உதவிய கொடையாளர்கள் வேண்டியதை இறைவன் நிறைவேற்றி தர வேண்டும் என பிரார்த்தனை செய்துவிட்டு, ஏழை மக்களுக்கு உணவை இலவசமாக வழங்கி வருகின்றனர்.

மதிய வேளையில் சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொரியல் சேர்த்து வழங்கப்படும் இந்த அறுசுவை உணவை, நோயாளிகளின் உறவினர்கள் பாத்திரத்தில் வாங்கி செல்கின்றனர். சிலர் அங்கேயே தட்டில் வாங்கி சாப்பிட்டு செல்கின்றனர். உணவே மருந்து என்பது போல, இதில் மூலிகை உணவும் வழங்கப்பட்டு வருவதாக கூறுகிறார் நாட்டுப்புற இசைக்கலைஞர் குமார்.

இது தங்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளதாக கூறும் நோயாளிகளின் உறவினர்கள், தினமும் அன்னதானம் வழங்கி வரும் தம்பதிக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளனர்.

நோயாளிகளுடன் தங்கியிருப்போர் மட்டுமின்றி, அந்தப் பகுதியில் வசிக்கும் ஏழை மக்களும் மிகுந்த நன்றியுணர்வோடு உணவை வாங்கிச் சாப்பிட்டு செல்கின்றனர்.

இப்படி ஏழை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வரும் நாட்டுப்புற இசைக்கலைஞர்களின் சேவை பயணத்தை வலுப்படுத்த, இன்னும் அதிகமான கொடையாளர்கள் நிதியுதவி கொடுத்து உதவுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share :