கை, கால்களை உடைத்துவிடுவேன் | எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா மிரட்டல்

        19

சென்னை அடுத்த மறைமலைநகரில் குத்தகை காலம் முடியும் முன்பே தொழிற்சாலையை காலி செய்ய சொல்லி இடத்தின் உரிமையாளருக்கு ஆதரவாக, தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா தனியார் நிறுவனத்திற்குள் அத்துமீறி புகுந்து இடத்தை காலி செய்யவில்லை என்றால் கை, கால்களை உடைத்துவிடுவேன் என தொழிற்சாலை நிர்வாகிகளை, மிரட்டல் விடுப்பது போன்ற வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் CEO கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் பேரில் எஸ்.ஆர்.ராஜா மீது மறைமலை நகர் காவல் நிலையத்தில் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா தொழிற்சாலைக்குள் புகுந்து மிரட்டல் விடுப்பது போன்ற வெளியான காட்சிகள் தான் இவை....

சென்னை அடுத்த மறைமலைநகரில் டேஜங் மோபார்ட்ஸ் என்ற வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. பூஜா கோயல் என்பவருக்கு சொந்தமான சுமார் ஒன்றே முக்கால் ஏக்கர் இடத்தில் 10 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் செயல்பட்டு வந்த இந்த நிறுவனத்திற்கு 2028ஆம் ஆண்டு வரை ஒப்பந்த காலம் இருக்கிறது. இருப்பினும், உரிமையாளர் பூஜா கோயலுக்கும், தொழிற்சாலை நிர்வாகத்திற்கும் இடையே கொடுக்கல், வாங்கலில் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, உரிமையாளர் பூஜா கோயல் ஒப்பந்த காலம் முடியும் முன்பே தொழிற்சாலையை காலி செய்ய சொல்லி நிர்பந்தித்ததாக சொல்லப்படுகிறது. அதற்கு, டேஜங் நிறுவனம் மறுத்துவிட்ட நிலையில், இரு தரப்பினருக்கும் பிரச்சனை வலுத்துள்ளது. இது தொடர்பாக, தொழிற்சாலை நிர்வாகம் கொடுத்த புகார் அடிப்படையில் மறைமலைநகர் காவல் நிலையத்தில் உரிமையாளர் பூஜா கோயல் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது.

தொழிற்சாலையை காலி செய்யுமாறு பல வழிகளில் தொந்தரவு கொடுத்த உரிமையாளர் பூஜா கோயல் கடைசியில் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜாவை அணுகி காலி செய்து தருமாறு கேட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜாவும் நேரடியாக தொழிற்சாலைக்கு சென்று முதலில் பேசி பிரச்சனையை முடிக்க பார்த்ததாகவும் அதற்கு தொழிற்சாலை நிர்வாகம் சம்மதிக்காத நிலையில், கோபமடைந்து வெளியில் எழுந்து வந்த எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, அங்கிருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கம்பெனியை இழுத்து மூடிவிடுவேன் என மிரட்டுவது போன்ற வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

மிரட்டலை கேட்டதும் தனியார் நிறுவன நிர்வாகி டென்சன் ஆகி எப்படி கம்பெனியை மூடுகிறீர்கள் என பார்க்கிறேன் பதிலுக்கு பதில் பேச கோபத்தின் உச்சிக்கு சென்ற எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா ஆபாச வார்த்தைகளால் பேசி, அடிக்க வருவது போல் முன்னோக்கி வந்த வீடியோவும் உள்ளது.

இதயெல்லாம் வேற யாருகிட்டயாச்சும் வச்சுக்க.... உன் கம்பெனியை எப்படி மூடுகிறேனு பாரு என கூறிய எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, கையை, காலை உடைத்துவிடுவேன் என ஆவேசமாக கூறுவது போன்ற வீடியோ ஆடியோவுடன் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவை வைத்து மேலிடத்திற்கு புகார் கொடுப்பேன் எனவும் அந்த தொழிற்சாலை நிர்வாகி கூறிய போதும் கூட எம்.எல்.ஏ. எஸ்.ஆர். ராஜா எந்த அலட்டலும் இல்லாமல் மீண்டும் மீண்டும் அவரை மிரட்டுவதிலேயே குறியாக இருந்தது போன்ற காட்சிகளும் பதிவாகியுள்ளன.

இது குறித்து விளக்கம் கேட்க நியூஸ் தமிழ் செய்திக்குழு எஸ்.ஆர்.ராஜாவை தொடர்பு கொண்ட போது மறுபடியும் அதே தொழிற்சாலைக்கு தான் செல்ல உள்ளதாகவும் அங்கு வந்து தன் தரப்பு விளக்கத்தை கேட்டுக் கொள்ளுமாறு கூறி அதிர வைத்தார்.


Share :