Big Stories

ஒரே அறையில் 5 வகுப்புகள்..! கழிவறை இல்லாமல் தவி்க்கும் குழந்தைகள் நைசாக நழுவ முயன்ற கவுன்சிலர்

        98

கோவை அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் கழிவறை கூட இல்லாத தற்காலிக கட்டடத்தில், ஒரே அறையில் 1 முதல் 5ம் வகுப்பு வரை குழந்தைகள் பயிலும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

பள்ளியில் அடிப்படை வசதிகள் சரியாக செய்து தராதது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு செல்போனை பேசிக்கொண்டே நைசாக நழுவ முயன்ற பேரூராட்சி கவுன்சிலரின் காட்சிகள் தான் இவை.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள வண்டிக்காரனூர் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அசாமை சேர்ந்த சில தொழிலாளர்கள் அங்குள்ள பாக்கு உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதால் அவர்களது குழந்தைளும் அந்த பள்ளியில் பயின்று வந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி கட்டடம் சேதமடைந்ததால், புதிய கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் தற்காலிகமாக தனியார் கட்டடம் ஒன்றை ஏற்படுத்தி தர அப்பள்ளி ஆசிரியர்கள் அதிகாரிகளை அணுகினர்.

இதனை சிறிதளவும் செவிக்கொடுத்த கேக்காத அதிகாரிகள் எந்த உதவியும் செய்து தரவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அப்பள்ளி ஆசிரியர்களே ஓர் தனியார் கட்டடத்தை ஏற்பாடு செய்து, அந்த கட்டடத்தில் உள்ள ஒரே ஒரு அறையில் 1 முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து கல்வி கற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த கட்டடத்தில் கழிவறை வசதியும் இல்லாததால் மாணவர்கள் பொதுவெளியில் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அதிக மாணவர்களை சேர்க்க போதிய இடவசதி இல்லாததால், தற்போது 17 மாணவர்கள் மட்டுமே அப்பள்ளியில் படித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்தப் பிரச்னையால் அசாம் குழந்தைகளுக்கு பள்ளியில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது அவர்கள் கல்வியை தொடர முடியாமல் தங்கள் பெற்றோருடன் பாக்கு நிறுவனத்திலேயே பணியாற்றம் அவலம் அரங்கேறியுள்ளது.
இதுகுறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களிடம் ஆசிரியர்கள் பேசிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த தொண்டாமுத்தூர் பேரூராட்சி கவுன்சிலர் மணிமேகலை, ஏன் செய்தியாளர்களிடம் இதுகுறித்து தகவல் அளித்தீர்கள் என ஆசிரியர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.

மேலும் பள்ளி கட்டடம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கவுன்சிலர் மணிமேகலை செல்போனில் பேசிக்கொண்டே நைசாக நழுவ பார்த்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கவுன்சிலர் மணிமேகலை, புதிய பள்ளி கட்டடப் பணி 20 நாட்களுக்குள் முடிவடையும் என்றார். ஆனால், வட்டார வளர்ச்சி அலுவலரோ கட்டட பணிகள் முடிய குறைந்தது 2 மாதங்களாவது ஆகும் என தெரிவித்தார். இதனால், பள்ளி செல்லும் குழந்தைகள் போதிய வசதியின்றி அல்லல் படும் நிலை தொடர்கிறது.


Share :        





VISITORS : 171523