Big Stories

இரண்டே கால் லட்சம் சும்மாவா வந்துச்சு.! KTM ஷோ ரூமை கிழித்து தொங்கவிட்ட தாய்.!

        123

காஞ்சிபுரத்தில் மகனின் ஆசைக்காக இரண்டே கால் லட்ச ரூபாய் கொடுத்து வாங்கிய கேடிஎம் பைக், வெறும் 8 மாதங்களில் அடிக்கடி பழுதானதால் தாய் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.

இந்த பழுதை எல்லாம் சரிசெய்து தர முடியாது என வாகன நிறுவனம் அலட்சியமாக பதில் கூறியதால், பணம் சம்பாதிப்பதற்காக வீணாய் போன வண்டியை தங்கள் தலையில் கட்டி விட்டதாக அந்த தாய் கண்ணீர் மல்க குற்றம் சாட்டியுள்ளார்.

ஆசை ஆசையாய் மகனுக்காக வாங்கி கொடுத்த பைக் வெறும் எட்டே மாதங்களில் பழுதானதால், ஷோ ரூம் வாசலில் நின்று தாய் ஆதங்கத்தை வெளிப்படுத்திய காட்சிகள் தான் இவை....

இளைஞர்களுக்கு மோட்டார் சைக்கிள் மீதான மோகம் இன்றும் குறையவில்லை. அப்படி மகனின் ஆசைக்காக கடன வாங்கி உயர்தர பைக் வாங்க, அந்த பைக் கொஞ்ச காலத்திலேயே ரிப்பேர் ஆக, ஷோ ரூமும் கைய விரிச்ச சம்பவம் தான், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது.

பஞ்சுபேட்டை பெரிய தெருவை சேர்ந்த மகேஸ்வரி, அப்பளம் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகிறார்.

மற்ற இளைஞர்களை போலவே இவரது மகன் ஜெகனும் பைக் வேண்டும் என அடம் பிடித்துள்ளார். ஆகவே மகன் ஆசைப்பட்டபடி இரண்டே கால் லட்ச ரூபாய்க்கு கே.டி.எம். பைக்கை வாங்கி கொடுத்து உள்ளார்.

சுசீ பஜாஜ் நிதி நிறுவனத்தில் வாகன கடன் வாங்கி, அதன் மூலம் பொன்னேரி கரைக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள ஷோ ரூமில் உயர்தர பைக்கை வாங்கி மகனுக்கு கொடுத்தார்.

ஆனால் மூன்றே மாதங்களிலேயே பைக்கில் குறிப்பிட்ட இயந்திரம் பழுதாக, வாக்குவாதத்திற்கு பிறகு அதனை ஷோ ரூம் மாற்றி கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து 6 மாதங்களுக்கு பிறகு ஜெகனும், அவரது தாய் மகேஸ்வரியும் மருத்துவமனைக்கு செல்லும்போது, வழியில் ஒரு சிறிய மேடு பள்ளத்தில் ஏறி இறங்கியதில், கே.டி.எம். பைக்கின் இரண்டு வீல்களிலும் ரிம் உடைந்துள்ளது.

இதனால் மறுபடியும் ஷோ ரூம் சென்றபோது, இந்த பழுதையெல்லாம் தங்களால் சரிசெய்ய முடியாது என ஊழியர்கள் அலட்சியதாக பதில் கூறியதாக கூறப்படுகிறது.

மேலும் சாலையை தவிர வேறு இடத்தில் வேகமாக ஓட்டியதால் தான் பழுது ஏற்பட்டதாகவும், இது எல்லாமே உங்கள் தப்புதான் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் கொந்தளித்து போன தாய் மகேஸ்வரி, ரோட்ல ஓட்டாம வீட்ல வச்சுக்கவா? பைக் வாங்கியிருக்கோம், பிறகு எதுக்கு வேகமா செல்லும் வண்டின்னு விளம்பரம் பண்றீங்கன்னு, கே.எடி.எம். ஷோ ரூம் ஊழியர்களை கேள்விகளால் கிழித்து தொங்க விட்டுள்ளார்.

இதனையடுத்து இன்சூரன்ஸ் பணம் வாங்கிய பின்னர் தான் பழுதை சரிசெய்வோம் என ஊழியர்கள் திட்டவட்டமாக கூற, பைக் ஏதாவது விபத்தில் சிக்கினால் தானே இன்சூரன்ஸ் பணம் பெற முடியும் என தாய் புலம்பி உள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தாய் மகேஸ்வரி, ஆரம்பத்திலேயே நல்ல பைக்கை கொடுக்காமல் டெமோவுக்காக வைக்கப்பட்டிருந்த பைக்கை தங்கள் தலையில் வாகன நிறுவனம் கட்டி விட்டதாகவும், இதனால் தான் அடிக்கடி பழுதாவதாகவும், இதற்கு வாகன நிறுவனம் கண்டிப்பாக பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேலும், ஏழை என்பதால் தானே ஏமாற்றி விட்டார்கள் என அந்த தாய் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்தார்.

வெறும் எட்டே மாதங்களில் பழுதான இந்த கேடிஎம் பைக்கில் அனைத்தையும் இலவசமாக மாற்றி தர வேண்டும் என்பதே, வாகன நிறுவனத்திடம் இந்த ஏழை தாய் வைக்கும் கோரிக்கையாக உள்ளது.

 


Share :        





VISITORS : 171726