Big Stories

வடமாநிலங்களில் தசரா கொண்டாட்டம் | ராவணன் உருவ பொம்மை எரிப்பு

        112

வடமாநிலங்களில் தசரா கொண்டாட்டத்தின் நிறைவு பகுதியாக ராவணன் வதம் நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு இடங்களில் கண்கவர் வாணவேடிக்கைகளுடன் அரங்கேற்றப்பட்ட நிகழ்வை காண ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.

குறிப்பாக தலைநகர் டெல்லியில் செங்கோட்டை மைதானத்தில் ராவணன் வதம் நிகழ்ச்சியில் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார். தலைநகர் டெல்லியில் தசரா பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

நிறைவு நாளில் அங்குள்ள செங்கோட்டை மைதானத்தில் ராவணன் உருவ பொம்மைக்கு தீ வைத்து எரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் பங்கேற்று, ராவணன் உருவ பொம்மை மீது வில் அம்பு எய்து வதம் செய்தனர்.

இதனையடுத்து அந்த பொம்மை தீ வைத்து கொளுத்தப்பட்டது.இதைப்போல டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர், டெல்லி துணை நிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

மூவரும் ஒன்றாக இணைந்து வில் அம்பு அய்து, ராவணன் உருவ பொம்மையை வதம் செய்தனர்.ஹரியானா மாநிலம் யமுனா நகரில் நடைபெற்ற நிகழ்வில், தீ வைத்து கொளுத்தப்பட்ட 80 அடி உயர ராவணன் உருவ பொம்மை, பார்வையாளர்கள் மீது விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் கூடியிருந்தவர்கள் அனைவரும் அலறியடித்து ஓடியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஆனாலும் சிலர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில், சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே அணியினர் சார்பில் ராவணன் உருவ பொம்மை எரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பங்கேற்ற திரளான கூட்டம், பட்டாசுகளை கொளுத்தி விட்டு ராவணன் பொம்மையை எரித்தனர்.ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள மோர்ஹாபாடி((Morhabadi)) மைதானத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தில், அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பங்கேற்றார்.

ராவணன் உருவ பொம்மை எரிக்கப்பட்டபோது, பட்டாசுகள் வெடித்தும், கண்கவர் வாணவேடிக்கை நிகழ்த்தியும் கொண்டாடினர்.

இதைப்போல அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள நேரு மைதானத்தில் கண்கவர் வாணவேடிக்கைகளுடன் அரங்கேற்றப்பட்ட ராவணன் உருவ பொம்மை எரிப்பு நிகழ்ச்சியில், அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா கலந்து கொண்டார்.

இதனிடையே ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் கிரிக்கெட் மைதானம் அருகே ராவணன் உருவ பொம்மைகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதைப்போல உத்தரப்பிரதேசம், பீகார், பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் ராவணன் பொம்மைகள் எரிக்கப்பட்டன.


Share :        





VISITORS : 171645