���������������������������

ஆசையை தூண்டிய ஆன்லைன் ரம்மிவீட்டில் இருந்த நகையும் போச்சு ரயில் முன் பாய்ந்த மாணவர்!

        111

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த பொறியியல் மாணவர் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தலை தனியாக, உடல் தனியாக துண்டித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் இருந்த நகையை அடமானம் வைத்து பணத்தை இழந்த இளைஞர் மன உளைச்சலில் விபரீத முடிவை தேடிக் கொண்டதின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு...


தண்டவாளத்தில் தனித்தனியாக கிடக்கும் தலை...உடல்... என போலீசாருக்கு ஒரு தகவல் வருகிறது.

ஆன்லைன் ரம்மியால் நிகழும் மரணங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், வாழ வேண்டிய வயதில் ஆன்லைன் ரம்மியால் பரிதாபமாக உயிரை பறிகொடுத்த இளைஞர் தான் இவர்...

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மலையாண்டிபட்டியைச் சேர்ந்த ரவி என்பவரின் 22 வயதான மகன் சந்தோஷ், தனியார் கல்லூரியில் பொறியியல் நான்காம் ஆண்டு படித்து வந்திருக்கிறார்.

நண்பர்களுடன் சேர்ந்து விளையாட்டாக ஆன்லைன் ரம்மி விளையாட தொடங்கிய சந்தோஷ், நாளுக்கு நாள் அதற்கு அடிமையாகி விட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 6 மாதத்திற்கு மேலாக பைத்தியம் பிடித்தது போல் ஆன்லைன் ரம்மி விளையாட ஆரம்பித்த சந்தோஷ், முழு நேரமும் அதிலேயே மூழ்கி கிடந்துள்ளார்.

விளையாட்டு மோகத்தில் பணத்தை இழந்தது எல்லாம் கண்ணை மறைக்க, வீட்டில் இருந்த பணத்தையும் எடுத்து இஷ்டத்துக்கு ஆயிரக்கணக்கில் வாரி இறைத்திருக்கிறார்.

மகனின் நடவடிக்கையை பெற்றோரும் கண்டு கொள்ளாத நிலையில், ஒருகட்டத்தில் வீட்டில் இருந்த நகையை எடுத்து அடமானம் வைத்து அந்த பணத்தையும் அநாவசியமாக இழந்துவிட்டார்.


இந்த விஷயம் வீட்டிற்கு தெரியவரவே பணம் நகையை பற்றி கேட்டிருக்கின்றனர். அப்போது, வாக்குவாதம் ஏற்பட்டு குடும்பத்தினரோடு சண்டை வரவே, வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார் சந்தோஷ்...

பின்னர், செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய போது கூட பணம், நகையுடன் வீட்டுக்கு வந்துவிடுவதாக கூறி கோபமாக பேசிய சந்தோஷ், என்னுடைய மரணத்திற்கு முழுக்க முழுக்க ஆன்லைன் ரம்மி தான் காரணம்...

அதில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொள்வதாக வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு மாயமாகியதோடு, செல்போனையும் ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டார்.


அதன் பின் சந்தோஷை பெற்றோர் தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்நிலையில்தான் சந்தோஷ் ரயில் முன் பாய்ந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சந்தோஷ் உடலை கைப்பற்றியுள்ள திருச்சி ரயில்வே காவல் துறையினர் உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தலை தனியாக, உடல் தனியாக தண்டவாளத்தில் சிதறிக் கிடந்ததால், இளைஞரை அடையாளம் கண்டுபிடிக்க 2 மணி நேரத்திற்கும் மேல் ஆனது. ஆசை ஆசையாய் தோளிலும், மார்பிலும் தூக்கி வளர்ந்த பையன், இப்படி துண்டு துண்டாக கிடப்பதை பார்த்து உடைந்து போன சந்தோஷின் தந்தை, இடிந்து போய் அழுது கொண்டே அமர்ந்திருந்தது காண்போருக்கு பரிதாபத்தை ஏற்படுத்தியது.

இந்த ஆண்டு படிப்பை நிறைவு செய்திருந்தால் வேலைக்குச் சென்று சந்தோஷ் சந்தோஷமாக வாழ்ந்திருப்பார். ஆனால், ஆன்லைன் ரம்மியால் விலைமதிப்பில்லாத உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைக்கு வந்திருக்கிறார்.

இதுபோன்ற உயிர்களை சூரையாடும் இந்த ஆன்லைன் விளையாட்டுக்கள், புதுப்புது பெயர்களில் இன்னமும் இன்றைய இளைஞர்களின் கைகளில் தவழ்ந்துகொண்டு தான் இருக்க செய்கிறது.

தமிழக அரசு ஆன்லைன் ரம்மி தடைக்கு அமைச்சரவை ஒப்புதல் பெற்றுள்ள நிலையில் அதை விரைந்து நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்பதே சந்தோஷ் பெற்றோர் போன்றவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.


Share :        

VISITORS : 171506