Big Stories

மகளுக்கு கல்யாணம் கடன் கொடுங்க..! மோசடி ராணியின் தில்லாலங்கடி லீலைகள்..! பரிதவிக்கும் அப்பாவிகள்.!

        108

ஒருவரல்ல... இருவரல்ல ஏகப்பட்ட பேரிடம் இஷ்டத்துக்கும் பணம் வாங்கி கம்பி நீட்டி இருக்கிறார் மோசடி ராணி ஒருவர்...மகளுக்கு கல்யாணம் என்று சென்டிமெண்டாக பேசி பணத்தை வாங்கிக் கொண்டு, கம்பி நீட்டிய மோசடி ராணி, கொடுத்த பணத்தை கேட்டவர்களிடம் உன்னால முடிஞ்சத பார்த்துக்கோ என சவால் விடுத்துள்ளார்.


இப்படி தடபுடலாக நடைபெற்று முடிந்த திருமணத்திற்குப் பின்னால் நடந்த தில்லுமுல்லுகள் திடுக்கிட வைக்கின்றன... சென்னை, தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தைச் சேர்ந்த ஜீவரத்தினம் ஓலா நிறுவனத்தில் தனக்கு சொந்தமான காரை ஓட்டி வருகிறார்.

சேலையூரை சேர்ந்த ரெஜி என்பவர் ஓலாவில் புக் செய்து ஜீவரத்தினத்தின் காரில் பயணம் செய்தார். அப்போது ஜீவாரத்தினம் குறித்து நைசாக விசாரித்து அக்கறையுடன் பேசியிருக்கிறார்.

அடிக்கடி ஜீவரத்தினம் வீட்டிற்கு சென்ற ரெஜி அவர்களின் குடும்பத்தினருடமும் அன்பும் பாசமும் பொங்கப் பழகினார். ஒரு கட்டத்தில் மகளின் திருமணத்திற்கு பணம் தேவைப்படுவதாகவும் யாரிடமாவது கடன் வாங்கிக் கொடுக்குமாறும் ரெஜி கேட்டிருக்கிறார்.

ஜீவரத்தினமோ காருக்கு தவணை செலுத்த 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வைத்திருப்பதாகக் கூறி வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ள, ரெஜியின் கிரிமினல் மூளை விழித்துக் கொண்டது.

திருமணம் முடிந்து நகைகளை விற்று கொடுத்து விடுவதாக ரெஜி கூற, இதனை நம்பிய ஜீவரத்தினமும் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை வாரிக் கொடுத்தார்.

அந்தப் பணத்தில்தான் மகளின் கல்யாணத்திற்கு விதவிதமான உடைகளை வாங்கினார் ரெஜி என்கிற மோசடி ராணி.
திருமணம் முடிந்து சில நாட்கள் கழிந்த பின்பு கொடுத்த பணத்தை ஜீவரத்தினம் கேட்க, நாளை தருகிறேன் நாளை தருகிறேன் என ரெஜி காலம் கடத்தினார்.

ஒரு கட்டத்தில் ஜீவரத்தினத்திடம் தகராறு செய்த ரெஜி, செல்போன் அழைப்பையும் எடுக்காமல் துண்டித்தார். அப்போதுதான் தனது மனைவி சாரதாவிடமும் 40 ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு ரெஜி ஏமாற்றியது தெரிய வந்தது.

ஒரு கட்டத்தில் ஜீவரத்தினம் மீதே சேலையூர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்த ரெஜி வழக்கை திசை திருப்ப முயன்றார்.
இப்படி ஜீவரத்தினத்தை ஏமாற்றியதோடு நில்லாமல் அவர் மூலம் அறிமுகமான ஓலா ஆட்டோ ஓட்டுநரான தாம்பரம் அடுத்த மப்பேடு பகுதியை சேர்ந்த சையத் கலில் அகமது அடுத்த டார்கெட்.

ஒரு கட்டத்தில் சையத் கலில் அகமதுவை வழிக்கு கொண்டு வந்த ரெஜி, அவருக்கு சொந்தமான வீட்டுப் பத்திரத்தை ஸ்ரீராம் ஃபைனான்சில் அடகு வைத்து ஒரு லட்சம் ரூபாய் வரை வாங்கியிருக்கிறார்.

அந்தப் பணத்தையும் திருப்பித் தராமல் ஸ்ரீராம் ஃபைனான்ஸ் ஊழியர்களையே மிரட்டினார்.
ஆடு தானாய் வந்து கழுத்தை காட்டியது போல், தனக்கு நன்றாக சமையல் செய்யத் தெரியும் என கூறிய சையத் கலில் அகமதை மகளின் திருமணத்திற்கு சமைக்கவும் வைத்தார் ரெஜி.

அதற்காக மட்டன் சிக்கன் வாங்கியது, சமையல் ஊழியர்களுக்கான சம்பளம் என 2 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றியிருக்கிறார். சையத் மூலம் அறிமுகமான அரிசி கடை உரிமையாளர் கௌசிக் என்பவரிடம் 30 ஆயிரம் ரூபாய்க்கு அரிசியும் வாங்கி ஏமாற்றினார்.

சையத் கலில் அகமது தனது மனைவியுடன் ரெஜியின் வீட்டிற்கே சென்று கொடுத்த பணத்தைக் கேட்டபோது உன்னால் முடிஞ்சத பார்த்துக்கோ என ரெஜி சவால் விடுத்தார்.
கொடுத்த பணத்தைக் கேட்ட சையத் கலில் அகமது மீதும் சேலையூர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்திருக்கிறார் மோசடி ராணி ரெஜி.


இவை மட்டுமல்ல, திருமணத்திற்காக தனது வீட்டில் பெயின்ட் அடித்த மணி என்பவரிடம் 10 ஆயிரம் ரூபாய்.. தனது வீட்டில் வேலை செய்த சாரதா என்பவர் மூலம் அறிமுகமான பெண்ணின் நகைகள், தாலி செயினை வாங்கி அடகு வைத்து ஒரு லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு கம்பி நீட்டினார் மோசடி ராணி ரெஜி.

ஜென்சி என்ற இளம்பெண்ணிடமும் நைசாகப் பழகிய ரெஜி, மகளின் திருமணத்திற்கு பணம் இல்லை எனவும் நீதான் தெய்வம்போல் கொடுத்து உதவ வேண்டும் என்றும் கூறி கால்களில் விழுந்து அழுது நாடகமாடியதால், 3 சவரன் தங்க நகையை அடகுவைத்து ரெஜிக்கு 80 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஏமாந்துள்ளார்.


இதேபோல் மப்பேடு பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மோகனிடம் 15 சவரன் நகைகளை அடகு வைத்து 5 லட்சம் ரூபாய் வாங்கியிருக்கிறார். அந்தப் பணத்தில்தான் மகளை திருமணம் செய்த மாப்பிள்ளைக்கு சொகுசு காரையும் வாங்கினார்.

மோகனுக்கு தெரியாமல் அவரது மனைவி கவிதாவிடம், மகள் திருமணம் முடிந்ததும் நகைகளை அடகு வைத்து தருவதாகக் கூறி 2 லட்சம் ரூபாயை மோசடி ராணி ரெஜி வாங்கி ஏமாற்றினார்.


அருகில் உள்ள சேட்டு கடையில் 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நெக்லஸ் என நீண்டுகொண்டே இருக்கிறது மோசடி ராணி ரெஜியிடம் பணத்தை இழந்து தவிப்பவர்களின் எண்ணிக்கை... அனைவரும் காவல் நிலையங்களில் புகார் கொடுத்துவிட்டு காத்திருக்கின்றனர்.
 


Share :        

VISITORS : 171628