Big Stories

வணங்கானுக்கு வணக்கம் போட்ட சூர்யா.. பாலாவின் பழிவாங்கும் படலம்?

        189

இயக்குநர் பாலாவின் வணங்கான் படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகி கொள்வதாக அறிவித்த பின்னணியில், படம் எடுப்பதாக சீன் போட்டு சுத்தி சுத்தி ஓடவிட்டு சூர்யாவுக்கு சுளுக்கெடுத்ததோடு, இது எல்லாமே வெறும் டிரையல் தான்...இனிமேல் தான் சூட்டிங்கே ஆரம்பம் எனக் கூறி 5 கோடி ரூபாய் பணத்தையும் விரையமாக்கியது தெரியவந்துள்ளது. பாலாவின் படங்கள் பாதியிலேயே நின்று போகும் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு...

வணங்கான் படத்தில் இருந்து பெரிய வணக்கத்தை போட்டுவிட்டு நடிகர் சூர்யா பொட்டி, சட்டியை கட்டிக் கொண்டு கிளம்பியிருக்கும் நிலையில், அதற்கு காரணமே இயக்குநர் பாலா படுத்திய பாடுதான் என்பது தெரியவந்துள்ளது.

ஹீரோ என்றால் ஹான்சம் லுக்காக இருக்க வேண்டும் என்ற தியரியை உடைத்துக் காட்டிய இயக்குநர் பாலா, நடிகர் சூர்யாவை வைத்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட பிதாமகன், நந்தா ஆகிய படங்களை எடுத்து வெற்றிக் கனியை ருசிக்க வைத்தார். இதனையடுத்து, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வணங்கான் படத்தில் பாலா - சூர்யா இடையிலான கூட்டணி இணைந்தது. அத்தோடு, இந்த படத்தை நடிகர் சூர்யாவின் 2 டி எண்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனமே தயாரித்தது. ஆனால், மே மாதம் சூட்டிங் ஸ்டார்ட் ஆனதில் இருந்தே வணங்கானுக்கு பிரச்சனைகளும் வரிந்துகட்டிக் கொண்டு வந்தன.

சூர்யாவுக்கு தன்னால் எந்த தர்மசங்கடமும் வந்துவிடக்கூடாது என பாலாவும், பாலாவின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவருடன் எப்போதும் துணை நிற்போம் என நடிகர் சூர்யாவும் பாலீஷாக அறிக்கை வெளியிட்டாலும் பின்னணியில் பயங்கர மனக்கசப்பு இருந்ததே படம் டிராப் ஆனதற்கு காரணம் என்கின்றனர். தன்னை வளர்த்துவிட்ட இயக்குநர் என்பதற்காக கதையை கேட்காமலேயே ஓகே சொன்ன நடிகர் சூர்யா, சூட்டிங்கின் போது கதையில் சிறு சிறு மாற்றங்களை சொல்லியிருக்கிறார்.

தன்னிடம் பாடம் கற்றுக் கொண்ட சூர்யா தனது கதையிலேயே மாற்றம் சொல்லுவதா? என தன்மான பிரச்சனையாக கருதிய பாலா, சூட்டிங்கில் தனது வேலையை காட்ட ஆரம்பித்திருக்கிறார். சூர்யாவை பல கிலோ மீட்டர் தூரம் ஓட விட்டு சுளுக்கெடுத்திருக்கிறார். கதைக்காக தன்னை எந்த அளவுக்கும் வருந்திக் கொண்டு நடிக்க தயாராக இருந்த நடிகர் சூர்யா பாலா சொன்னதை கேட்டு கால் கடுக்க வேகாத வெயிலில் ஓடியிருக்கிறார்.

சூட்டிங் ஸ்டார்ட் ஆகி கொஞ்ச நாட்கள் ஆனதும் இயக்குநர் பாலா ஓவர் அட்வாண்டேஜ் எடுத்துக் கொண்டு ஜாடை, மாடையாக சூர்யாவை மரியாதை குறைவாக வசைபாடிய நிலையில், அது எல்லாமே படக்குழுவினர் வழியாக சூர்யாவின் காதுகளுக்கு சென்றுள்ளது. இதனையடுத்து, சூட்டிங் முக்கியமா? சுயமரியாதை முக்கியமா? என நினைத்த நடிகர் சூர்யாவும் சூட்டிங்கில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிவிட்டார்.

சில மாதங்கள் பிரேக் எடுத்த நடிகர் சூர்யா, படத்தை பாதியிலேயே நிறுத்திவைப்பது சரியாக வராது என நினைத்து மீண்டும் சூட்டிங்கிற்கு செல்வது குறித்து பாலாவிடம் விசாரித்திருக்கிறார். அப்போது தான், இதுவரை எடுத்த காட்சிகள் எல்லாம் டிரையல் என குண்டை தூக்கி போட்ட பாலா, மீண்டும் ஆரம்பத்தில் இருந்து சூட்டிங் எடுக்க வேண்டும் என சொல்லி அதிர வைத்திருக்கிறார். ஓடி ஓடி எடுத்த காட்சிகள் எல்லாம் ரிஹர்சல் தான் என பாலா சொன்னதைக் கேட்டு டென்ஷன் ஆன நடிகர் சூர்யா, தனது தயாரிப்பு நிறுவனத்தின் 5கோடி ரூபாய் பணமும் வீணாய் போய்விட்டது என விரக்தியடைந்ததாக கூறப்படுகிறது

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் படத்திற்காக சூர்யா பிஸியாகி விட்டதால், வணங்கானை கண்டுகொள்ளவில்லை. அத்தோடு, படத்தில் இருந்து தாம் விலகிக் கொள்கிறேன் என பாலாவே வெளிப்படையாக அறிவித்து விட்டால் நல்லது என சூர்யா சூசகமாக சொல்லி அனுப்பியதால் தான், கீழே விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டல என்பது போல, சூர்யாவை புகழ்ந்து தள்ளி பாலா அறிக்கை வெளியிட்டதாக சொல்கிறார்கள். ஆனாலும், சூர்யா மாறிவிட்டார் என பாலா சொல்லாமல் சொல்லுவதற்காக தான் நந்தாவில் நான் பார்த்த சூர்யா, பிதாமகனில் நீங்கள் பார்த்த சூர்யா என பாலா குறிப்பிட்டிருக்கிறாராம்...

இதற்கு முன்பாக, அர்ஜுன் ரெட்டி படத்தை விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து வர்மா என்ற பெயரில் பாலா படம் இயக்கியிருந்த நிலையில், படம் நன்றாக வராததால், தயவு, தாட்சணியமே பார்க்காமல் ரிலீஸ் செய்ய வேண்டாம் என அப்படியே நிறுத்திவிட்டார் விக்ரம். தற்போது சூர்யாவும் இப்படி செய்து விட்டதால் தான் வளர்த்துவிட்ட பிதாமகன்கள் இருவரும் தன்னை அடுத்தடுத்த படங்களில் பாதியில் கழட்டிவிட்டது பாலாவுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.


Share :        

VISITORS : 363093