Big Stories

கார்த்திகை தீபத்திருவிழா அதிகாலை ஏற்றப்பட்ட பரணி தீபம்.!

        252

திருவண்ணாமலை தீபத்திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோவிலில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் மற்றும் பக்தர்களின் அரோகரா பக்தி கோஷம் விண்ணை பிளக்க பரணி தீபம் ஏற்பட்டது. மாலை மலை உச்சியில் மஹாதீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், தீபத்திருவிழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும் நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் கருதப்படும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சிவலிங்கமே மலையாக காட்சியளிப்பதாக ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த இங்கு தீபத்திருநாளன்று 2668 அடி உயர மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.

இந்தாண்டு திருவண்ணாமலை கார்த்திகை தீப பெருவிழா நவம்பர் 27 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து விழாவின் பத்து நாளும் உண்ணாமலை அம்மையுடன் அண்ணாமலையார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ((விநாயகர் உள்ளிட்ட சுவாமிகள் பஞ்சரதத்தில் எழுந்தருள ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்த நிகழ்வும் நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான பத்தாம் நாளில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்பட்டது. இதற்காக திருக்கோவிலின் ஒன்றாம் பிரகாரத்தில் பிரதோஷ நந்தி அருகில் மடக்குகளில் விளக்கு வைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க முதலில் ஒரு தீபம் ஏற்றி அதன் மூலம் ஐந்து தீபங்கள் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

முன்னதாக வைகுந்த வாசலில் இருந்து மலை உச்சிக்கு பரணி தீபம் தூக்கி காட்டப்பட்டு பின்னர் அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கொடி மரத்தின் முன்பாக பரணி தீபம் எழுந்தருளியது. ஒன்றே பரம்பொருள் என்பதை உணர்த்தும் இதனை காண கோவில் வளாகத்தில் காத்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்தடன் அண்ணாமலையாருக்கு அரோகரா என முழங்கியது விண்ணை எட்டியது.


இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர்.

இதனை தொடர்ந்து மாலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்காக மலை உச்சியில் தயாராக உள்ள பஞ்சலோகத்தாலான 5.75 அடி உயரமும் 300 கிலோ எடையும் கொண்ட கொப்பரையில் மஹாதீபம் ஏற்படும். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் வீடுகளில் அனைவரும் தயாராக வைத்திருந்த விளக்குகளை ஏற்றி அண்ணாமலைக்கு அரோகரா என சொல்லி தீபமேற்றுவர்.


Share :        





VISITORS : 363161