Big Stories

நாங்கல்லாம் ராவான ரவுடி | சும்மா பேசிட்டு இருக்கேன்னு நினைக்காத | தியாகு யாருனு தெரியுமா.!

        211

காஞ்சிபுரத்தில் மறைந்த பிரபல தாதா ஸ்ரீதரின் கூட்டாளி பெயரை சொல்லி, நெல் வியாபாரியிடம் மிரட்டி பணம் பறிக்க முயன்ற 3 இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மிரட்டல் ஆடியோ வெளியாகி காஞ்சி மாநகரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மிரட்டல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட ரவுடி பிரபாவை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் பல்லவர்மேடு பகுதியை சேர்ந்தவர் தியாகு. நெல் வியாபாரியான இவரை, செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர், ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பல்வேறு கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், அடிதடி என சுமார் 60 க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய, தற்போது குண்டர் சட்டத்தில் சிறையில் இருக்கும் காஞ்சிபுரம் பொய்யாகுளம் பகுதியை சேர்ந்த ரவுடி தியாகுவின் பெயரைச் சொல்லி மர்ம நபர் மிரட்டியுள்ளார்.

மேலும், காஞ்சிபுரத்தை சேர்ந்த ரவுடி பிரபா தனது சகோதரர் என்றும், அவன் கேட்டு கொண்டதாலேயே பொறுமையாக பேசுவதாகவும் அந்த மர்ம நபர் தெரிவித்துள்ளார். மேலும், தான் அனுப்பும் வங்கி கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யவில்லை என்றால் சங்கை அறுத்து விடுவதாக மிரட்டிய மர்ம நபர், பொய்யாகுளம் தியாகு யாரென்பதை, போலீசாரிடமே கேட்டு தெரிந்து கொள் எனக் கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நெல் வியாபாரி தியாகு, சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, பல்லவர்மேடு பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும், பல்லவர்மேடு பகுதியில் உள்ள புறக்காவல் நிலையம் அருகே இரவு பகலாக காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சம்பவம் தொடர்பாக ரவுடி பிரபா மற்றும் மிரட்டிய நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், நெல் வியாபாரிக்கு மிரட்டல் விடுத்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி காஞ்சிபுரம் பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவின்பேரில், விசாரணையில் இறங்கிய தனிப்படை போலீசார், மர்ம நபரின் செல்போன் எண்ணை டிராக் செய்தனர். அது கோயம்புத்தூரை அடையாளம் காட்டவே, அங்கு விரைந்த தனிப்படை போலீசார், விடுதியில் தங்கியிருந்த நாமக்கலை சேர்ந்த செந்தில், தர்மபுரியை சேர்ந்த மோகன், அந்தமான் நிக்கோபாரை சேர்ந்த அருண் ஆகிய மூவரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், மோகனின் நண்பர் கேட்டுக் கொண்டதற்காக, ரவுடி பிரபாவை அறையில் தங்க வைத்துள்ளனர் இந்த மூவரும். அப்போது, அருணின் செல்போனை வாங்கி, செந்திலிடம் கொடுத்து, தனது எதிர் வீட்டில் குடியிருக்கும் நெல் வியாபாரி தியாகுவை மிரட்டி பணம் கேட்க கூறியுள்ளார் ரவுடி பிரபா. மரண போதையில் இருந்த செந்திலும், பிரபா சொன்னபடி நெல் வியாபாரியை மிரட்டியுள்ளார். அவரிடம், தனது பெயரை சொன்னால் வேலைக்கு ஆகாது என்பதற்காக, பிரபல தாதா ஸ்ரீதரின் கார் டிரைவரான தினேஷின் கூட்டாளியான பொய்யாகுளம் தியாகு பெயரை பயன்படுத்தி மிரட்டியது தெரியவந்தது.

 


Share :        





VISITORS : 363063