Big Stories

பணம் கொடுத்தால் பிணத்துக்கும் லைசன்ஸ்..! RTO அலப்பறைகள்!

        169

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஓட்டுநர் உரிமம் கூவிக் கூவி விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. முறைகேடுகளை தவிர்ப்பதற்காக ஆன்லைன் செயல்பாடுகள் வந்தபோதிலும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளையே புரோக்கர்களாக மாற்றி, வீட்டிலிருந்தபடியே லைசென்ஸ், வெளியூரில் இருந்தபடியே லைசென்ஸ் என பகிரங்கமாக நோட்டீஸ் அடித்து விநியோகம் செய்யும் அளவுக்கு லஞ்சம் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது.

நெல்லை மாவட்டத்தில் 3 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. பொதுவாக ஒருவர் தாம் வைத்திருக்கும் வாகனத்துக்கு ஏற்றார் போல் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு இணையதளத்திலோ, நேரடியாகவோ சென்று பதிவு செய்து போக்குவரத்து அதிகாரிகள் முன்னிலையில் வாகனத்தை இயக்கி காட்டி அதன் பின்னே ஓட்டுனர் உரிமம் பெற முடியும். இந்த நிலையில் அம்பாசமுத்திரத்தில் எம்.கே.எம். ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி என்ற நிறுவனம், “வீட்டிலிருந்தபடியே, ஆர்.டி.ஓ அலுவலகம் செல்லாமலேயே டூவீலர் லைசென்ஸ் பெறலாம் என்றும் 40 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் வெளியூரில் இருந்தபடியே, ஆர்.டி.ஓ அலுவலகம் வராமலேயே ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கலாம் என்றும் பகிரங்கமாக நோட்டீஸ் அச்சடித்து விநியோகம் செய்துள்ளது. ஆர்.டி.ஓ அலுவலக அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் நோட்டீஸ் விநியோகம் செய்யும் அளவுக்கு அவர்களுக்கு தைரியம் வந்திருக்காது என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

முறைகேடுகளை தவிர்க்கவே, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரர்களுக்கு அனுமதி இல்லை என்று கூறி, அனைத்து செயல்பாடுகளும் கணினி மையமாகக்கப்பட்டுள்ளன. எனவே இடைத்தரகர்கள் இல்லாத இடத்தை பூர்த்தி செய்வதற்காக வாகன பயிற்சி பள்ளிகள் மூலம் இது மாதிரி செயல்களில் ஈடுபடுகின்றனரா என்று மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை நிரூபிக்கும் விதமாக நான்கு சக்கர வாகனத்திற்கு ஓட்டுனர் உரிமம் பெற அரசு நிர்ணயித்த ஆயிரத்து 200 ரூபாய் மட்டுமே செலவாகும் நிலையில், வாகன பயிற்சியின்போது தவறுகள் இருந்தாலும் அதனை சரி செய்து ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு 5000 ரூபாய் தர வேண்டும் என்றும் கூடுதலாக 2000 ரூபாய் கொடுத்தால் வட்டாரப் போக்குவரத்து கழகத்திற்கு வராமலே ஓட்டுநர் உரிமம் பெற முடியும் என்றும் எம்.கே.எம். ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க ஊருக்கு வரவேண்டியதில்லை என்றும் வெளியூரில் இருந்தபடியே பணம் அனுப்பினால் போதும் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் முகம்மது மொய்தீன் அந்த ஆடியோவில் கூறியுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, புதிய வாகனத்தை பதிவு செய்ய, ஆவணம் ஒன்றுக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்தால் மட்டுமே ஆர்.டி.ஓ கையெழுத்திடுவார் என பெண் வாகன டீலர் ஒருவர் பேசும் ஆடியோவும் வெளியாகியுள்ளது. அப்படி லஞ்சம் கொடுப்பது ஒருவகை விதிமுறையாகவே ஆர்.டி.ஓ அலுவலகங்களில் கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும் அந்த பெண் டீலர் குண்டைத் தூக்கிப் போட்டார்.

இப்படி வாகன டீலர்கள் மூலமும் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் மூலமும் லஞ்சத்தைப் பெற்றுக் கொண்டு தகுதியற்ற நபர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதாலும் கடமைக்கு என வாகனங்களை புதுப்பித்துத் தருவதாலும் ஒவ்வொரு நாளும் ஏராளமான விபத்துகள் நிகழ்கின்றன. தகுதியற்ற நபர்களால் ஏற்படும் விபத்துகளில் அவர்களின் உயிருக்கோ, உறுப்புகளுக்கோ பாதிப்பு ஏற்படுவதோடு, அப்பாவிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுவதாகக் கூறும் சமூக ஆர்வலர்கள், வட்டார போக்குவரத்து அலுவலங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள், டீலர்கள் உள்ளிட்டோர் மீதான நடவடிக்கைகளும் கடுமையாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


Share :        





VISITORS : 363151