Big Stories

கல்குவாரிக்காரர்களின் கண்ணாமூச்சி... கலங்கும் கிராம மக்கள்!

        164

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கல்குவாரிகளில் வைக்கப்படும் அதிகப்படியான வெடிகளால் நில அதிர்வு ஏற்படுவதுடன், மாசு காரணமாக உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் கூறி, கல்குவாரியை மக்கள் முற்றுகையிட்டனர். மக்கள் போராட்டம் நடத்துவதும் அப்போது மட்டும் சில காலத்துக்கு குவாரிகள் மூடப்படுவதும் பிறகு மீண்டும் திறப்பதுமான கண்ணாமூச்சி ஆட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

ஒசூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகப்படியான மலைக்குன்றுகள் இருப்பதால், அங்கு ஆங்காங்கே கல்குவாரிகள் முளைத்துள்ளன. கொரட்டகிரி கிராமத்தின் அருகே அமைக்கப்பட்ட கல்குவாரியால் சாலைகள் பழுதடைந்து சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதாகக் கூறி அக்கிராம மக்கள் 2 மாதங்களாக போராடி வந்த நிலையில், அவை அப்போதைக்கு மூடப்பட்டன. 2 மாதங்கள் கடந்த நிலையில், சத்தமின்றி குவாரிகளை மீண்டும் திறந்து, வழக்கத்தை விட கூடுதலான சப்தம் கொண்ட வெடிகளை வெடிக்கச் செய்து கற்கள் உடைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

குடியிருப்புகளுக்கு அருகிலேயே வெடிகள் வைத்து வெடிக்கச் செய்வதும் நாள்தோறும் கிராமம் வழியே நூற்றுக்கணக்கான லாரிகளில் கற்களை ஏற்றிச் செல்வதும் என மீண்டும் பழைய நிலையே திரும்பியதாகக் கூறும் கிராம மக்கள், மேய்ச்சல் பகுதி முழுவதையும் ஆக்கிரமித்துள்ள சாம்பல் கழிவுகள் புற்களை சாப்பிடும் கால்நடைகளின் வயிற்றுக்குள் சென்று பல்வேறு உபாதைகளை ஏற்படுத்துவதாகவும் கூறுகின்றனர். இதனையடுத்து அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து கல்குவாரியை முற்றுகையிட்டு பணிகளை முடக்கினர்.

விரைந்து வந்த வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

ஒசூர் பகுதிகளில் கல்குவாரிகள் அனுமதித்த அளவை விட அதிகளவில் கற்களை வெட்டுகின்றனரா? பொதுமக்களை பாதிக்கும் வகையில் குவாரிகளை நடத்துவோரை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருக்கின்றனரா என்கிற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. மக்கள் போராட்டம் நடத்துவதும் அப்போது மட்டும் சில காலத்துக்கு குவாரிகள் மூடப்படுவதும் பிறகு மீண்டும் திறப்பதுமான கண்ணாமூச்சி ஆட்டங்கள் தொடர்ந்து கொண்டே உள்ளதாகக் கூறும் சமூக ஆர்வலர்கள், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Share :        





VISITORS : 363179