Big Stories

மணக்க மணக்க பனை ஓலை கொழுக்கட்டை... பார்த்து பார்த்து பக்குவமாக செய்து வழிபாடு...

        168

திருக்கார்த்திகை தீபத்தையொட்டி நெல்லை மாவட்டம் திசையன்விளையில் அப்பகுதி மக்கள் மணக்க மணக்க பனை ஓலை கொழுக்கட்டை செய்து அதனை சாமிக்கு படைத்து வழிபாடு செய்தனர். பச்சரிசி, பனை வெல்லம், ஏலக்காய், துருவிய தேங்காய் என ஒவ்வொரு பொருளையும் பார்த்து பார்த்து பக்குவமாக சேர்த்து பனைஓலை கொழுக்கட்டை செய்த சுவாரசிய தொகுப்பு இதோ...

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தென்காசி ஆகிய மாவட்டங்களில் பனை மரங்கள் அதிகம். தென்மாவட்டங்களில் பனைமரத்தை நம்பிதான் பல ஆயிரம் குடும்பங்களின் வயிற்றுப்பிழைப்பே கழிகிறது.

பலரது வீடுகளில் பனை ஓலைக் கொழுக்கட்டை பானைகளில் வெந்தால்தான் திருக்கார்த்திகை தீப விழாவே முற்றுபெறும் எனலாம். அந்தவகையில் திசையன்விளை இட்டமொழி கிராமத்தில் மக்கள் மணக்க மணக்க பனை ஓலை கொழுக்கட்டை செய்து சாமிக்கு படைத்து திருக்கார்த்திகை தீபத்தை கொண்டாடி உள்ளனர்.

இதற்காக பச்சரிசியை நன்கு கழுவி ஊற வைத்து நிழலில் உலர்த்தினர். பின்பு உலர்த்தப்பட்ட பச்சரிசியை அரைத்து சலித்து எடுத்து, அதில் பனை வெல்லம், பாசிப்பயிறு, ஏலக்காய், சுக்கு, பொறிகடலை, துருவிய தேங்காய் ஆகிவைற்றை தேவைக்கு ஏற்ப சேர்ந்து நன்றாக பிசைந்து வைத்துக் கொண்டனர்.

பின்னர் பனைமரத்தின் உச்சிபகுதியில் இருந்து வெட்டி எடுத்து வரப்பட்ட குருத்தோலையை சுத்தம் செய்து, ஒரு அடி நீளத்தில் பனை ஓலைகளை துண்டு துண்டாக நறுக்கினர். இதையடுத்து நறுக்கி வைக்கப்பட்ட பனை ஓலையை பிரித்து அதற்கு இடையில் பிசைந்த மாவை அழுத்தி வைத்து, அதனை பனை ஓலை நாரால் பக்குவமாக கட்டி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வேக வைத்தனர்.

அடுப்பில் வைக்கப்பட்டு கொழுக்கட்டை வெந்தபிறகு பனை ஓலையின் நிறமே பழுப்பு நிறமாக மாறியது. பனை ஓலையின் மணம், அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களின் மணம் என கொழுக்கட்டையின் வாசனை அருகில் உள்ள அத்தனைபேரையும் சாப்பிட தூண்டியது.


Share :        





VISITORS : 363117