Big Stories

கண்ணை கவரும் கிளிஞ்சல் பூங்கொத்து... ஏற்றுமதிக்கு ஆவணம் செய்ய கோரிக்கை..

        169

கடல் சிப்பிகள் மற்றும் மற்றும் கடல் கிளிஞ்சல்கள் கொண்டு செய்யப்படுகின்ற கைவினை பொருட்களை வாங்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஆர்வம் காட்டும் நிலையில், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள், கிளிஞ்சல் பொருட்களை ஏற்றுமதி செய்ய மத்திய மாநில அரசு ஆவண செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு .

கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்று பாடினார் நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை. பெற்ற பிள்ளை கைவிட்டாலும், ஒருவேளை கற்ற கல்வியே கைவிட்டாலும் கூட, பழகிய கைத்தொழில் கைப்பாற்றும் என்பது பெரியோர்கள் கூற்று.

இயற்கையோடு தொடர்புடைய பொருட்களை கொண்டு செய்யப்படும் கைத்தொழில்களாக கூடை பின்னுதல், பாய் பின்னுதல், மண்பாண்டங்கள் செய்தல், அலங்கார கைவினை பொருட்கள் செய்தல் என பல தொழில்கள் உள்ளன. இந்த வரிசையில் கடல் தாயிடமிருந்து கிடைக்கும் சிப்பிகள் மற்றும் கிளிஞ்சல்களை கொண்டு ஏராளமான கைவினைப்பொருட்கள் செய்யப்படுகின்றன.

சிற்பிகளால் செய்யப்படும் பூங்கொத்து, காதணிகள் , பாசிமணிகள், ஷோகேஷ் பொம்மைகள் பார்ப்பதற்கு அழகாகவும், மிக நேர்த்தியாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கிளிசல்களான பூங்கொத்து காண்போரை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம், கன்னியாகுமரியில் ஹேண்டிகிராப்ட் துறை, நபார்டு வங்கி, மற்றும் எம்.எஸ்.எம் உடன் இணைந்து மாவட்ட தொழில் மையங்கள் மூலமாக அப்பகுதியில் உள்ள இளம் பெண்களுக்கு பயிற்சிகள் அளித்து வருவதாக கூறுகிறார் இதில் பயிற்சி பெற்ற நிஷா என்பவர்.

இதுகுறித்து அவர் கூறும் போது, 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இந்த பயிற்சியை அளித்து வருவதாகவும், பூக்களால் ஆன பூங்கொத்து ஓரிரு நாட்களில் வாடிவிடும் ஆனால் கடல் சிப்பிகள் மூலமாக செய்யப்படுகின்ற பூங்கொத்துக்கள் 10 முதல் 50 வருடங்கள் ஆனாலும் எந்த சேதாரமும் இல்லாமல் அப்படியே இருக்கும் என்கிறார். அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர்ருக்கு நினைவு பரிசாக வழங்க கிளிஞ்சல்பூங்கொத்து அதிகம் வாங்குப்படுவதாக தெரிவித்தார்.

2 ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள பொருட்கள் செய்ய பயிற்சி அளிப்பதாக கூறும் நிஷா, இதன் மூலம் பெண்கள் தங்கள் சொந்த காலில் நிற்க இது பெரும் துணையாக இருக்கும் என்கிறார்.

கடல் சிப்பிகள் மற்றும் கிளிஞ்சல்கள் கொண்டு உருவாக்கப்படும் பொருட்கள் வாங்க உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டும் நிலையில் கிளிஞ்சல்களான கைவின பொருட்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய மத்திய மாநில அரசுகள் ஆவண செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கைத்தொழில் மூலம் தனிநபர் வருமானம் உயர்வதோடு மட்டுமில்லாமல், நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்தும் என்பது நிதர்சனம் . கைவினை பொருட்களை ஏற்றுமதி செய்ய அரசு உதவிக்கரம் நீட்டுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Share :        





VISITORS : 363032