Big Stories

அரிய வகை நோயால் சிறுவன் பாதிப்பு | தமிழக அரசு உதவிட கோரிக்கை.!

        212

சென்னை போரூர் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுவனுக்கு முதுகெலும்பின் கீழ் பகுதியில் அரிய வகை கேன்சர் கட்டி இருப்பது தெரியவந்த நிலையில், பொருளாதார பிரச்னையால் குழந்தையின் மேல் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் பெற்றோர்கள் தவிக்கின்றனர். மேலும் தங்களின் மகனின் உயிரை காப்பாற்ற தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2ம் வகுப்பு பள்ளி சிறுவன் சக சிறுவர்களோடு விளையாடி மகிழ வேண்டிய வயதில் அரிய வகை LOCALISED EWING SARCOMA INTRASPINAL LESION L5-S3 கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் காட்சி கல்நெஞ்சம் கொண்டவர்களையும் மனம் உருகச் செய்கிறது.

சென்னை போரூர் பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார். இவரது இரண்டாவது மகன் நித்திஸ்வரன் 2ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு புத்தி கூர்மை அதிகம் என்பதால் சிறுவனுக்கு யுகேஜி வகுப்பில் இருந்து 2 வகுப்புக்கு பள்ளி நிர்வாகம் டபுள் ப்ரோமோஷன் ( DOUBLE PROMOTION ) கொடுத்துள்ளனர். இதனையடுத்து உடல் வலிமையுடன் ஆரோக்கியமாக இருந்து சக சிறுவர்களோடு சந்தோஷமாக விளையாடிய சிறுவனுக்கு கடந்த செப்டம்பர் மாதம், முதல் முறையாக மிகுந்த கால் வலி ஏற்பட்டது. இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனையில் பரிசோதித்து பார்த்ததில் மாணவனின் கீழ் முதுகெலும்பில் கேன்சர் கட்டி இருந்தது தெரியவந்தது.

இதேபோல் ஏற்கனவே ஒரு பெண் குழந்தைக்கு கால் எலும்பு அருகில் இதுபோன்ற கேன்சர் கட்டி இருந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு கட்டி அகற்றப்பட்டது. ஆனால் நித்திஷ்வரனுக்கு முதுகெலும்பு முடியும் இடத்தில் கேன்சர் கட்டி இருப்பதால் அங்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மற்றொரு வாய்ப்பாக சிறுவனுக்கு 6 முறை கீமோ தெரபி கொடுக்கப்பட்டு அதன் பின்னர் ரேடியாலஜி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும், பின்னர் புரோட்டான் என்று சொல்லப்படக்கூடிய கேன்சர் கட்டியை செயல் இழக்க செய்யும் சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கு சுமார் 40 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்றும் கூறியுள்ளனர். பொருளாதார வசதியில் பின்தங்கியுள்ள இவர்கள் அரசு மருத்துவமனையிலும் விசாரித்த போது அங்கு இதற்கான சிகிச்சை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் செய்வதறியாது திகைத்த குடும்பத்தினர் தங்கள் சேமித்து வைத்த பணத்தை எல்லாம் செலவு செய்து இதுவரை 3 முறை சிறுவனுக்கு கீமோ தெரபி செய்துள்ளனர்.

மாதம் 20 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக சம்பளம் வாங்கும் சசிக்குமார் தனது மகனின் மேல் சிகிச்சைக்காக பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார். அத்தோடு உரிய நேரத்தில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க தவறினால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்ற மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்து வருகின்றனர். மேலும் தங்கள் மகனின் உயிரை காப்பாற்ற தமிழக அரசு உதவ வேண்டும் என நித்திஷின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.


Share :        





VISITORS : 363204