ரூ. 100 கொடு.. அப்பதான் சிகிச்சை..! மிரட்டிய ஊழியர்..!அலறவிட்ட நோயாளி..

        58


நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள தீர்த்தபதி அரசு மருத்துவமனையில் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைகாக வந்து செல்கின்றனர். இந்தநிலையில், சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகளிடம் மருத்துவமனையில் OP சீட்டு வழங்கும் பெண் ஊழியர் ஒருவர் 100 ரூபாய் பணம் வாங்கிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

100 ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்ட அந்த பெண் ஊழியர், கொடுத்தவர் வீடியோ எடுப்பதை பார்த்து அந்த பணத்தை அவரிடமே திருப்பி கொடுத்துவிட்டு மன்னிப்பு கேட்டார். இதனால் ஆவேசமான பணத்தை கொடுத்தவர் உங்களை நோயாளிகளிடம் பணம் வாங்க சொன்னது யார் என கேட்டு அடுக்கடுக்கான கேள்விகளை ஊழியரிடம் ஆவேசமாக எழுப்பினார்.

மேலும் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் 100 ரூபாய் பணத்தை வாங்கியதாகவும், 100 ரூபாய் கொடுத்தால் தான் சிகிச்சைக்கு அனுமதிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் உட்பட அனைவரிடமும் 100 ரூபாய் பெற்றதாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டில் கர்ப்பிணிகளுக்கு ஆண் குழந்தை பிறந்தால் 2 ஆயிரத்து 500 ரூபாயும், பெண் குழந்தை பிறந்தால் ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை உறவினர்களிடம் வசூலிப்பதாக நோயாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் இந்த மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் பணி நேரத்தில் இருப்பதில்லை என்றும், அவர்களுடைய சொந்த கிளினிக்கிற்கு சென்று விடுவதாக நோயாளிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஏழை எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்கவே அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வரும் நிலையில், அங்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் பணம் வசூலிப்பது வேதனையாக உள்ளதாகவும், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நோயாளிகளின் கோரிக்கையாக உள்ளது.


Share :        

VISITORS : 349079