திரும்ப வரமாட்டேன்னு நினைச்சேன்..! குடல் அழுகிய பெண்ணை காப்பாற்றிய மருத்துவர்கள்

        51

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி முத்தையா காலணியை சேர்ந்தவர் ரவி மற்றும் அவரது மனைவி காந்தி. ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார் ரவி. இந்நிலையில் தன் மனைவியான காந்திக்கு வயிறு வீங்கி வயிற்று வலி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். ஏழ்மையான குடும்பம் என்பதால் தனியார் மருத்துவமனைகளில் லட்ச லட்சமாக பணம் கொடுத்து சிகிச்சை பெறும் அளவிற்கு பொருளாதார வசதியும் இல்லை. கடுமையான வயிற்று வலியால் துடிதுடித்து வந்த காந்தியை சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் காந்திக்கு வயிற்றில் குடல் இறக்கம் ஏற்பட்டது தெரியவந்தது. அதில் குடல் இறக்கம் ஏற்பட்டதால் அடைப்பு ஏற்பட்டு சிறுகுடல் அழுகிய நிலையில் இருந்ததை கண்டறிந்தனர்.பிரச்சனையை கண்டறிந்த உடனேயே அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் கலந்தாலோசித்து மருத்துவ காப்பீடு மூலம் உரிய பரிசோதனைகள் செய்து அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.

மயக்க மருந்து நிபுணர் சுபசங்கரி, செவிலியர் ரமாமணி, 28 வயதான மருத்துவர் ஹரிபிரசாத்துடன் மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை செய்ய தயாராகினர். பின் சிறுகுடலை அறுவை சிகிச்சை செய்து நீக்கி மீண்டும் குடலை இணைத்து, பின் குடல் இறக்கத்திற்கும் சுமார் 4 மணி நேரத்தில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து முடித்தனர்.

ஏழ்மையான பின்னணியிலிருந்து மருத்துவரை மட்டுமே நம்பி வந்த காந்திக்கு ஒரு ரூபாய் செலவில்லாமல் சிகிச்சை அளித்து வாழ வைத்த மருத்துவர்களுக்கு செவிலியர்களுக்கும் கண்ணீர் மல்க அப்பெண்மணி நன்றி தெரிவித்தார். திரும்பி வர மாட்டேன் என அனைவரும் நினைத்த போது தனக்கு மருத்துவர்கள் உயிர் கொடுத்ததாக கைகூப்பி தழுதழுக்கும் குரலில் பேசினார்.குணமடைந்த காந்தி தன் கணவரின் ஆட்டோவில் வீடு திரும்பினார். சிங்கம்புணரி வட்டார அரசு மருத்துவமனையில் முதன்முறையாக நடைபெற்ற பெரிய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி முடித்த மருத்துவர்களுக்கு பொதுமக்களும் , சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டினர்.


Share :        





VISITORS : 348891