பணம், காசே வேண்டாம்பா.. வீட்டுல ஓரமா இருக்கோம்..! வீட்டை விட்டே துரத்திய மகன்..கெஞ்சி அழும் பெற்றோர்..

        118


கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் அருகே செட்டியார்மடம் பகுதியை சேர்ந்த ராஜையன் என்ற முதியவருக்கு 89 வயது ஆகிறது. இரண்டு மகன்கள், இரண்டு மகள்களுக்கு திருமணம் செய்து வைத்து சொத்துக்களையும் பிரித்துக் கொடுத்த ராஜையன், சிறிய இடத்தில் வீடு ஒன்றை கட்டி மனைவி ராஜம்மாளுடன் வசித்து வந்தார்.அந்த வீட்டைக் கூட பெற்றோருக்கு விட்டுத் தர மனமில்லாத மூத்த மகன்தான் பெற்றோரை வயிறு எரிய வைத்துக் கொண்டிருக்கிறார்.



தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற மூத்த மகன் பால்தாஸ், வயதான பெற்றோரை ஏமாற்றி அவர்கள் வசித்த இடத்தையும் வீட்டையும் தனது பெயருக்கு பத்திரப் பதிவு செய்திருக்கிறார். அந்த வீட்டிற்கு தனது மனைவியுடன் சென்ற பால்தாஸ் பெற்றோரிடம் வீட்டை விட்டு வெளியே செல்லும்படி கட்டாயப்படுத்த அவர்களோ மறுத்திருக்கின்றனர். இதனால் ஆவேசமடைந்த பால்தாஸ், வீட்டின் முன்பக்க கதவு, வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதோடு அவற்றை தூக்கி வெளியே வீசியிருக்கிறார். உச்சகட்ட கொடுமையாக தந்தை ராஜையனையும் தாய் ராஜம்மாளையும் அடித்து உதைத்து வீட்டை விட்டே துரத்தியிருக்கிறார்.



மகன் தாக்கியதால் காயமடைந்த ராஜையனும் ராஜம்மாளும் சிகிச்சைக்காக குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சட்டை கிழிந்த கோலத்தில் மருத்துவமனையின் படுக்கையில் அமர்ந்திருக்கும் ராஜையன், பெத்து வளர்த்த எங்களை மகன் இப்படி செய்துட்டானே... என் சொத்து எனக்குப் பிறகு உனக்குத்தான்பா..காசு பணம் கூட வேண்டாம்.. வீட்டுல ஓரமா இருக்கிறோம்பா என்ற கண்ணீருடன் கெஞ்சும் வீடியோ காட்சிகள் வெளியாகி காண்போரின் உள்ளத்தை உறைய வைத்துள்ளது.



சம்பவம் குறித்து இரணியல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வயதான காலத்தில் மகனால் இன்னல்களை அனுபவிக்கும் பெற்றோருக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.


Share :        





VISITORS : 363350