வேகம் விவேகம் அல்ல.. குறும்படம் மூலம் விழிப்புணர்வு..!

        96

வேகம் விவேகம் அல்ல, ஆரம்பமே அசத்தலா இருக்கு என, சாலை பாதுகாப்பு குறித்து பல வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தாலும், நாங்க என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம் என்பது போல் சிலர் சாலையில் கடல் சீற்றத்தை போல் சீறி பாய்ந்து சென்று விபத்தில் சிக்குவது இன்று வரை வாடிக்கையாக தான் உள்ளது.

அந்த வகையில் சாலை பாதுகாப்பு குறித்து சென்னை அடையாறில் உள்ள பேட்ரிசியன் கல்லூரியில் காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை சார்பில் சாலை விபத்து தொடர்பான குறும்படம் ஒன்று வெளியிடப்பட்டது. சாலை விபத்துக்களால் ஏற்படும் பாதிப்புகளை உணர்த்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த குறும்படத்தில், விபத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

அதிவேகமாக செல்வதால் மட்டுமே வாகன விபத்துகள் அதிகரிப்பதாகவும், இளைஞர்கள் பாதுகாப்பாக வாகனங்களை இயக்க வேண்டும் என அறிவுரை வழங்கிய காவலர்கள், வாகன ஓட்டுநர் உரிமம் இருந்தால் மட்டுமே சாலை விபத்துக்கான காப்பீடுகளை பெற முடியும் என்பதன் அவசியத்தை எடுத்துரைத்தனர்.

தலைக்கவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் விபத்துகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக்கூறிய காவலர்கள், சாலை போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், போலீசாரை பார்த்ததும் தலைக்கவசம் அணிவதால் எந்த பயனும் இல்லை என மாணவர்களுக்கு உணர்த்தினர்.

இதைதொடர்ந்து கடந்த 30 ஆண்டுகளாக எந்த ஒரு சாலை விபத்துக்களையும் ஏற்படுத்தாத சென்னை மாநகர பேருந்து ஓட்டுநர் ஜெயக்குமார், ஆட்டோ ஓட்டுநர் மனோகர் இருவருக்கும் போலீசார் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.வேகத்தால் விவேகத்தை இழந்து, சாலை விபத்துக்களை ஏற்படுத்துவதால், தானும் உடல் உறுப்புகளை இழப்பதுடன், ஏதுமறியா அப்பாவிகளை ஊனமாக்குவது சரியா என வாகன ஓட்டிகள் புரிந்து கொள்ளும் வகையில் இந்த குறும்படம் அமைந்திருந்தது.

 


Share :        

VISITORS : 348867