வங்கியில் கடன் வாங்கிவிட்டு எஸ்கேப்..ஜப்திக்கு வந்த வீட்டில் துப்பாக்கிகள்

        51


சென்னை அண்ணா நகர், 5வது அவென்யூவில், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் குப்தா தனது மனைவி வினிதாவுடன் வசித்து வந்ததோடு அண்ணா நகர் ரவுண்டானா அருகே வீட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். தொழிலை மேம்படுத்துவதாகக் கூறி, கடந்த 2012ம் ஆண்டு, பேங்க் ஆப் இந்தியா அண்ணாநகர் வங்கி கிளையில், வீட்டை அடமானம் வைத்த சஞ்சய் குப்தா 53 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார்.

அவ்வாறு கடன் வாங்கிய நாள் முதலே தவணை தொகையை சரியாக செலுத்தாத நிலையில் வங்கி நிர்வாகம் பலமுறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது. ஒரு கட்டத்தில் வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டிய தொகை ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சென்றதால் சஞ்சய் குப்தா அடமானமாக வைத்த வீட்டை ஜப்தி செய்வதற்கான நடவடிக்கையில் வங்கி நிர்வாகத்தினர் இறங்கினர். நீதிமன்றத்தின் உத்தரவை பெற்ற வங்கி நிர்வாகத்தினர், ஜப்தி செய்வதற்கான நோட்டீசையும் வீட்டில் ஒட்டிச் சென்றனர். இதற்கிடையே சஞ்சய் குப்தாவோ வீட்டையே பூட்டிவிட்டு குடும்பத்துடன் தலைமறைவானார்.

காலக்கெடு முடிவடைந்த நிலையில், வீட்டை ஜப்தி செய்ய முடிவு செய்த பேங்க் ஆப் இந்தியா வங்கியின் கடன் பிரிவை சேர்ந்த அதிகாரிகள், அந்த வீட்டை திறந்து உள்ளே சென்றனர். பொருட்களை பறிமுதல் செய்ய நினைத்த அதிகாரிகள் அறை ஒன்றினை நோட்டமிட்டபோது அதிர்ச்சியில் உறைந்தனர். காரணம் அந்த அறையில் 12 தோட்டக்களுடன் இரண்டு கை துப்பாக்கிகள் இருந்ததை கண்ட வங்கி அதிகாரிகள் வெலவெலத்துப் போனார்கள்.

தகவலறிந்து சென்ற அண்ணா நகர் காவல் நிலைய போலீசார் இரண்டு துப்பாக்கிகளையும் 12 தோட்டாக்களையும் பறிமுதல் செய்ததோடு
அந்த துப்பாக்கிகளுக்கு உரிய ஆவணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் கொடுத்த வங்கிக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு குடும்பத்துடன் தப்பிச் சென்ற சஞ்சய் குப்தா மீது ஆயுத தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சஞ்சய் குப்தா யார்? அவரது பின்னணி என்ன என்பது குறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
 


Share :        

VISITORS : 349087