ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்..!அதிமுகவுக்கு ஆதரவா? - அண்ணாமலை சூசகம்

        70

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், திமுக கூட்டணி வேட்பாளரை அறிவித்து பிரச்சாரத்தை துவங்கிவிட்டது. ஆனால், அதிமுகவில் இன்னும் கூட்டணி குழப்பமே நீடித்து வருகிறது. அதிமுக கூட்டணியில் அதிமுக போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கும் நிலையில், அதனை பா.ஜ.க. ஏற்குமா அல்லது தனித்து போட்டியிடுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்த நிலையில், திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க.மாநில தலைவர் அண்ணாமலை, இடைத்தேர்தல் என்பது கட்சியின் வளர்ச்சியை பார்ப்பதற்கான அளவுகோல் இல்லை என தெரிவித்தார்.கூட்டணி தர்மத்தை காத்து அதன்படி அனைத்து கட்சிகளும் இருந்தால் தான் கூட்டணிக்கும் மதிப்பு இருக்கும் எனவும் அண்ணாமலை கூறியிருக்கிறார்.
 
தொடர்ந்து பேசிய அவர், திமுக கூட்டணிக்கு எதிராக பலம் பொருந்திய வேட்பாளரை நிறுத்த வேண்டியது அவசியம் என்றதோடு, இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சியின் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் எனவும் கூறினார்.

கூட்டணியில் அதிமுக தான் பெரிய கட்சி என்ற அண்ணாமலை, எந்த கட்சி பெரியது என்பதை விட யாரை வேட்பாளராக நிறுத்துகிறோம் என்பது தான் மிக முக்கியம் என்றார். அத்தோடு, விரைவில் பா.ஜ.க. நிலைப்பாடு அறிவிக்கப்படும் எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.
 
அண்ணாமலை சொல்லுவது போல் அந்த பலம் பொருந்திய வேட்பாளர் பா.ஜ.க. வேட்பாளராக இருக்குமா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அதிமுக தான் பெரிய கட்சி என்றதோடு, அங்கு ஏற்கனவே அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது எனவும் சூசகமாக கூறினார்.

ஈரோட்டில் முன்னாள் அமைச்சர்கள் இருப்பதால், நல்ல தகுதி வாய்ந்த வேட்பாளரை நிறுத்தி அந்த வேட்பாளரை வெற்றி பெற வைப்பதற்கான அனைத்து ஆதரவையும் கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளும் வழங்க வேண்டும் என்றார்.


Share :        

VISITORS : 349057