குழந்தை பிறந்து கொஞ்ச நேரம்தான்.. தாய் திடீரென உயிரிழக்க.. இறப்பில் சந்தேகம் உள்ளது. மருத்துவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என உறவினர்கள் மருத்துவமனை முன்பு குவிந்தனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள செங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் வெல்டிங் பட்டறை கூலி தொழிலாளி ஜெயராம். இவரது மனைவி இந்திரா தேவி பிரசவத்திற்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 21 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் 23 ஆம் தேதி ஆண் குழந்தை பெற்றெடுத்த இந்திராதேவி சிறிதுநேரத்தில் உயிரிழந்தார்.
இந்த தகவலை மருத்துவர்களோ, செவிலியர்களோ தங்களிடம் தெரிவிக்காமல் இந்திராதேவியை ஐசியு வார்டில் வைத்து சிகிச்சை அளிப்பதுபோல் நாடகம் நடத்தியதாக குற்றம்சாட்டிய உறவினர்கள், தாயின் இறப்பில் சந்தேகம் உள்ளதாககூறி மருத்துவமனை முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர்.. அதற்கு மறுத்த உறவினர்களுக்கும் போலீசருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பெண்கள், வயதானவர்கள் என்றுகூட பாராமல் போலீசார் அவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டதால் அப்பகுதியில் சிறிதுநேரம் பதற்றம் நிலவியது..
என் மகள் இறந்து 3 மணி நேரமாகியும் மருத்துவர்கள் வாயை திறக்கவில்லை என இந்திரதேவியின் தந்தை ஆவசேம் காட்ட.. இறப்புக்கு மருத்துவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என உறவினர்கள் அழுத்தமாக கூறினர். நாங்கள் ஏழைகள்.. என்ன நடந்தாலும் கேட்க ஆள் இல்லை என்றுதானே மருத்துவர்கள் இப்படி செய்கின்றனர்.. காசு பணம் உள்ளவர்களாக இருந்திருந்தால் இப்படி செய்வார்களா? எங்களைப்போல் ஏழைகளை இப்படிதான் கொல்வதா? என உறவினர்கள் கேள்விக்குமேல் கேள்வி எழுப்பினர்..