சினிமா

கோயில்களில் வைகாசி மாத உற்சவங்கள் பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம்

        18

திருவாரூர் தியாகராஜர் கோயில் கமலாலய குளத்தில் தெப்பத் திருவிழா தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், உற்சவ மூர்த்திகளான பார்வதி சமேத கல்யாண சுந்தரர் தெப்ப மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சுவாமிகளுக்கு சிறப்பு தரிசனம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி வலம் வந்தனர்.


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயிலின் வைகாசி விசாகத் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் எழுந்தருள, சிவாச்சாரியார்கள், கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை மற்றும், தீபாராதனை காட்டி அம்மன் கொடியை ஏற்றி வைத்தனர். அதனைத்தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு பெரியாவுடையார் திருக்கோயிலில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு 108 வலம்புரி சங்குகளால் ஆன யாக பூஜை நடைபெற்றது. குடமுழுக்கு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையில் கும்பம் வைத்து, யாகம் வளர்த்து தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வலம்புரி சங்குகளில் புனிதநீர் நிரப்பப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சக்கரமல்லூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு பாமா ருக்மணி சமேத வேணுகோபால் திருக்கோயிலின் அக்னி வசந்த பெருவிழாவின் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. 100 அடி நீளத்தில் களி மண்ணால் துரியோதனன் சிலை செய்யப்பட்டு, பீமன் - துரியோதனன் சண்டையிடும் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, நடைபெற்ற தீமித் திருவிழாவில் அனைவரும் பக்தியுடன் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லிநாயனப்பள்ளி கிராமத்தில் உள்ள அருள்மிகு பெரிய மாரியம்மன் ஆலய விழா 33 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமரிசையுடன் கொண்டாடப்பட்டது. ஏழு ஊர் கிராமத்தினர் இணைந்து அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபட்டனர். கரகம் ஏந்தி வந்த சாமிகள் பெரிய மாரியம்மன் ஆலயத்தில் தலை கூடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர் ஒருவர் மண்ணை வாரி இறைத்து அருள்வந்து கதற அவரிடம் பெண்கள் குறைகேட்ட சம்பவமும் நடந்தேறியது. விழாவில் கலந்து கொண்ட சிறுவர்- சிறுமியர்கள், பெண்கள் என பலரும் மேள தாளங்களுக்கு ஏற்ப ஆடிபாடி மகிழ்ந்தனர்.


Share :        

VISITORS : 790847