ஆன்மீகம்

தைப்பொங்கல் சிறப்பு வழிபாடு.. பக்தர்கள் சாமி தரிசனம்..!!

        90

தைப்பொங்கலை முன்னிட்டு புத்தாடை அணிந்து கோவில்களில் ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

சென்னை வடபழனி முருகன் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். புத்தாடை அணிந்து வந்த மக்கள் மனமுருக அரோகரா கோஷத்துடன் முருகனை வழிபட்டனர்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அதிகாலை கோ பூஜையுடன் கோவில் நடை திறக்கப்பட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த மக்கள் குளிரையும் பொருட்படுத்தாமல் சாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை வழியாக வந்து கிரிவல பாதையில் காவடி எடுத்தும் ஆடிபாடியும் மலைகோவிலை வந்தடைந்தனர். பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் மூன்று மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேதராய் சாரங்கபாணி சுவாமி தேரில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் அம்பாளுக்கும், சுவாமிக்கும் 250 லிட்டர் நெய்யினால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின் மகாதீபாராதனை நடத்தப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்ட நெய்யினை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவிலில் ஸ்ரீ கோமதி அம்மனுக்கு பொங்கல்படி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அம்மனுக்கு பொங்கல் பானை, கரும்பு, மஞ்சள், காய்கறிகள் அடங்கிய சீர்வரிசை பொருட்களை பக்தர்கள் கையில் ஏந்தி வந்து சமர்ப்பித்தனர்.

கடலூரை அடுத்த வண்டிபாளையம் பகுதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஏராளமான மக்கள் குடும்பத்துடன் வந்து பொங்கல் வைத்து வழிபட்டு சென்றனர். சந்தன காப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அங்காள பரமேஸ்வரி அம்மனை மனமுருக பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.

திண்டுக்கல் நாகல்நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சீரடி பாபா கோவிலில் சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை நடைபெற்றது. ஆரத்தி நிறைவடைந்த பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Share :        

VISITORS : 348951