இந்தியா

லிங்க்க தொட்ட... நீ கெட்ட... வங்கிக் கணக்கில் திருடும் கும்பல்

        119

எங்கும், எதிலும், டிஜிட்டல் மயம் என இணைய சேவைகளில் மக்கள் மூழ்கி கிடக்க, அவர்களது செல்போன்களுக்கு விதவிதமாக லிங்குகளை குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வங்கி கணக்கில் இருந்து பணத்தை சுருட்டி வந்த சைபர் க்ரைம் கொள்ளையர்களை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.

நொடி பொழுதில் பணத்தை கொள்ளையடித்து எப்படி ? கொள்ளை கும்பலின் தலைவன் யார் என கண்டறியும் பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

சென்னை பரங்கிமலை பகுதியை சேர்ந்த அனந்தராமனின் செல்போனுக்கு 12 ரூபாயில் மின்கட்டணம் செலுத்தலாம் என சலுகையுடன் வந்த குறுஞ்செய்தியை மின்வாரியத்தில் இருந்து வந்ததாக நம்பி அதில் வந்த லிங்கை கிளிக் செய்துள்ளார்.

லிங்க்கை தொட்ட சிறிது நேரத்தில் அவருடைய வங்கி கணக்கில் இருந்து 1 லட்சத்து 98 ஆயிரம் 915 ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாக பரங்கிமலை சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

இதே போல் எச்.டி.எஃப்.சி வங்கி கணக்கின் KYC ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததால் வங்கி கணக்கை முடக்குவதை தவிர்க்க கீழுள்ள லிங்கை க்ளிக் செய்யுமாறு கூறியுள்ளனர். இதனை நம்பி லிங்கை தொட்டு 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் இழந்துள்ளனர்.

இந்த இரண்டு புகார்களையும் விசாரித்த சைபர் கிரைம் போலீசார், மோசடி செய்த வங்கி கணக்கை வைத்து மோசடியில் ஈடுபட்டது ஹரியானவை சேர்ந்த கும்பல் என்பதை கண்டுபிடித்தனர். பின்னர் சென்னை தெற்கு மண்டல சைபர் க்ரைம் ஆய்வாளர் கவிதா தலைமையிலான தனிப்படை போலீசார், ஹரியானா சென்று உள்ளூர் போலீசாருடன் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.

இந்த வேட்டையில் மஞ்சித் சிங், நாராயண சிங் என இருவரை கைது செய்து விசாரணை நடத்திய போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாராவை மையமாக கொண்டு மாநிலம் தோறும் தரகர்களை வைத்து மக்களின் வங்கி கணக்கில் இருந்த பணத்தை கொள்ளையடித்து வந்துள்ளனர்.

குறுஞ்செய்தியை தொட்டாலே போதும் செல்போனில் உள்ள கூகுள் பே, போன் பே போன்ற பணபரிவர்த்தனை செயலிகள் வாயிலாக வங்கி தரவுகளை எடுத்து பணத்தை நொடி பொழுதில் கொள்ளையடித்து வந்ததாக தெரிவித்தனர்.

சுமார் 75 லட்சம் ரூபாய் வரை கொள்ளையடித்து, அதற்குண்டான கமிஷன் தொகையை எடுத்து கொண்டு ஜம்தாராவில் உள்ள கொள்ளை கும்பல் தலைவனுக்கு அனுப்பியதும் அம்பலமாகியுள்ளது.

லிங்க்கை தொட்டாலே எப்படி வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள் என தொழில்நுட்பத்தை கண்டறிய சைபர் கிரைம் நிபுணர்கள் ஆய்வு நடத்தி வரும் நிலையில், இது போன்ற முகமறியாத நபர்களிடமிருந்து வரும் குறுஞ்செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் பாதுகாப்புடனும், விழிப்புடனும் இருக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
 


Share :        

VISITORS : 348840