விளையாட்டு

அனல் பறந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போர்க்கண்ட சிங்கம் போல் வெற்றி பெற்ற வீரர்

        131

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி அனல் பறக்க நடைபெற்றது. போர்கண்ட சிங்கம் போல் தலையில் அடிபட்டு தள்ளாடி கீழே விழுந்த நிலையிலும் சிகிச்சைக்கு பிறகு மீண்டு வந்து தொடர்ந்து களமாடிய சிவகங்கை மாவட்டம் பூவந்தியை சேர்ந்த அபி சித்தர் 26 காளைகளை அடக்கி முதல் பரிசை தட்டிச் சென்றார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். ஆரம்பத்தில் இருந்து இறுதிவரையில் சுவாரசியம் குறையாமல் வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.

வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து காளைகள் துள்ளி குதித்து விளையாடியது சிலிர்ப்பூட்டியது. பெரும்பாலான காளைகள் காளையர்களின் கையிலேயே சிக்காமல் நாலுகால் பாய்ச்சலில் பாய்ந்து ஓடின. இன்னும் சில காளைகள் காளையர்களை பக்கத்தில் கூட விடவில்லை...நான்கு பக்கமும் சுற்றி சுற்றி கொம்புகளை வைத்து விளையாட்டு காட்டி வீரர்களை திணறிடித்தன.

பிடிபட்ட மாடுகள் களத்தில் இருந்து வெளியேறாமல் மீண்டும் திரும்பி வந்து பயமுறுத்தி பந்தா காட்டின. இதனால், பிடிபட்ட காளையும், விளையாடிக் கொண்டிருந்த காளையும் முட்டி மோதிக் கொண்டநிகழ்வுகளும் நடந்தது.

ஆக்ரோஷமாக களமாடிய காளைகள் வீரர்களை புரட்டி எடுத்து புருவங்களை உயர்த்த வைத்தன. இப்படி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 26 காளைகளை அடக்கிய சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த அபி சித்தர் முதல் பரிசை தட்டிச் சென்றார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் நிசான் கார் பரிசாக வழங்கப்பட்டது. கன்றுடன் நாட்டுப் பசு ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது.

முன்னதாக, காளையை பிடிக்கும் வேகத்தில் அங்கு நின்ற டெம்போவை கவனிக்காமல் அபி சித்தர் அதில் வேகமாக மோதிவிட்டார். இதில் அபி சித்தருக்கு தலையில் பலமாக அடிபட்டது. ஆனாலும் களத்தில் இருந்து வெளியேற மறுத்த அபி சித்தர் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு விடாப்பிடியாக இருந்து மீண்டும் வந்து விளையாடி காளைகளை அடக்கி நெகிழ்ச்சியூட்டினார்.

அடிபட்டதற்கு பிறகும் கூட மூன்று காளைகளை அடக்கினார் அபி சித்தர். முன்னதாக, அபி சித்தருக்கு காலிலும் காயம் ஏற்பட்ட நிலையில், காலில் துணியை கட்டி வைத்துக் கொண்டு விளையாடினார். அப்போதும் களத்தில் இருந்து அபி சித்தர் வெளியேறவில்லை.

இதேபோல, 20 காளைகளை அடக்கிய சிவகங்கை மாவட்டம் ஏனாதியை சேர்ந்த அஜய் என்ற இளைஞருக்கு இரண்டாவது பரிசு கொடுக்கப்பட்டது. அவருக்கு டி.வி.எஸ். ஸ்போர்ட் பைக் வழங்கப்பட்டது. அடுத்ததாக 12 காளைகளை அடக்கிய அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்திற்கு மூன்றாவது பரிசாக ஒக்கினாவா எலக்ட்ரிக் பைக் வழங்கப்பட்டது.

தொடர்ந்து களத்தில் சிறப்பாக விளையாடி வீரர்களை தெறிக்கவிட்ட புதுக்கோட்டை மாவட்டம் கைகுறிச்சியை சேர்ந்த தமிழ்செல்வனின் காளை மிகச்சிறந்த காளையாக தேர்வு செய்யபட்டது. அந்த காளைக்கு 9 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிசான் மேக்னைட் கார் மற்றும் கன்றுடன் நாட்டுப் பசு பரிசாக வழங்கப்பட்டது..

அடுத்தபடியாக 2ஆம் இடம் பிடித்த புதுக்கோட்டை எஸ்.எம். சுரேஷ் என்பவரின் காளைக்கு டி.வி.எஸ். ஸ்போர்ட் பைக் பரிசாக வழங்கப்பட்டது. மூன்றாம் இடம் பிடித்த உசிலம்பட்டி பாட்டாளி ராஜா காளைக்கு பஜாஜ் சிடி110 பைக் பரிசாக வழங்கப்பட்டது.


Share :        

VISITORS : 348979