உலகம்

ரஞ்சிதமே.. ரஞ்சிதமே..! ரவுண்டு கட்டி ஆடிய ரஷ்ய கலைஞர்கள்

        92

கோவை மேட்டுப்பாளையம் அருகே இந்திய - ரஷ்ய நாட்டு நல்லுறவுக்கான கலாச்சார நடன நிகழ்ச்சி களைகட்டியது. அதிலும் ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலுக்கு ரஷ்ய நடன குழுவினர் போட்ட ஆட்டம் அரங்கையே அதிர வைத்தது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே எஸ்.எஸ்.வி.எம். பள்ளியில் நடைபெற்ற இந்திய- ரஷ்ய நல்லுறவுக்கான கலாச்சார நடன நிகழ்ச்சியில் ரஷ்யாவை சேர்ந்த நடன குழுவினரின் நடனம் பார்வையாளர்களை கட்டிப் போட்டுவிட்டது.

ரஷ்ய நாட்டின் கலாச்சாரம் , நடனம் குறித்து பள்ளி மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட ரஷ்ய நாட்டிய கலைஞர்கள் பங்கேற்றனர். தமது நாட்டின் பல்வேறு கலாச்சார நடனங்களை மேடையில் அரங்கேற்றி திறமைகளை வெளிப்படுத்தி கைத்தட்டல்களை அள்ளிச் சென்றனர்.

நிகழ்ச்சியின் ஹைலைட்டாக பொங்கலுக்கு வெளியான வாரிசு திரைப்படத்தில் ஹிட் அடித்த ரஞ்சிதமே பாடலுக்கு ரஷ்ய நடன குழுவினர் போட்ட ஆட்டம் பார்வையாளர்களை பரவசத்தின் உச்சிக்கே அழைத்துச் சென்றது.

தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையான பாவாடை தாவணியில் மேடையில் தோன்றிய ரஷ்ய நாட்டு கலைஞர்கள் செம ஆட்டம்
போட, பார்வையாளர்களாக அமர்ந்திருந்த மாணவர்களின் கரகோஷங்கள் விண்ணைப் பிளந்தன.

இந்திய - ரஷ்ய நல்லுறவு கலாச்சாரத்தை மாணவர்களுக்கு எடுத்துக் கூறும் நோக்கில் 20 வது ஆண்டாக ரஷ்ய நடனக் குழுவினர் தமிழ்நாட்டிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ளனர். தொடர்ந்து பல்வேறு கல்லூரி மற்றும் பள்ளிகளிலும் ரஷ்ய கலாச்சார நடன நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளனர்.


Share :        

VISITORS : 349050