இந்தியா

"தாய்ப் பால் கொடுப்பதால் அழகு குறையாது" - மிஸஸ் தமிழ்நாடு பட்டம் வென்ற கோவை பெண்

        68

கேரளாவில் நடைபெற்ற போட்டியில் கோவையை சேர்ந்த பெண் மிஸஸ் தமிழ்நாடு அழகி பட்டத்தை வென்றுள்ளார். தனது அழகின் ரகசியங்கள் குறித்து பேசிய அவர், அரிசி உணவு உண்பதில் தவறில்லை, தாய்ப்பால் கொடுப்பதால் அழகு குறையாது எனத் தெரிவித்தார்.

கேரள மாநிலம் கொச்சியில் திருமணம் ஆனவர்களுக்கான "மிஸஸ் தென் இந்திய அழகி போட்டி 2023" நடைபெற்றது.இதில் பங்கேற்ற கோவையை சேர்ந்த ஷாலு ராஜ், மிஸஸ் தென் இந்திய அழகி போட்டியில் இரண்டாவது ரன்னர் அப் இடத்தையும், மிஸஸ் தமிழ்நாடு அழகி பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளார்.

பெகாசஸ் குளோபல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் கடந்த 20 வருடங்களாக அழகி போட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் "மிஸஸ் தென் இந்திய அழகி போட்டி" நடத்தப்பட்டது. தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த 14 பேர் இறுதி சுற்றுக்குள் நுழைந்தனர். அவர்களில் ஷாலு ராஜ் "மிஸஸ் தென் இந்திய அழகி போட்டி"யில் இரண்டாவது இடத்தையும், மிஸஸ் தமிழ்நாடு அழகி பட்டத்தையும் கைப்பற்றினார்.வெற்றி பெற்றவர்களுக்கு பரக்கத் ஜூவல்லர்ஸ் வடிவமைத்த தங்க கிரீடம் சூட்டப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஷாலு ராஜ், மிஸஸ் தமிழ்நாடு அழகிப் பட்டம் வென்றதன் ரகசியத்தை பகிர்ந்து கொண்டார். தனது உணவுப் பழக்க வழக்கங்கள் குறித்து பேசிய அவர் அரிசி உணவு உண்பதில் தவறில்லை எனவும், தனக்கு மாம்பழம் மிகவும் பிடிக்கும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஷாலுராஜ், திருமணமான பெண்கள் தங்களைப் பற்றி யோசிப்பதில்லை என்றும் தங்களது நலனிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார். குழந்தை பிறந்த பிறகு உடற்பயிற்சி அவசியம் என்று கூறிய ஷாலுராஜ், தாய்ப்பால் கொடுப்பதால் அழகு குறையாது என்றும் அந்த சமயத்தில் யோகா, நீச்சல் பயிற்சி மேற்கொண்டால் உடல் நலமும் மன நலமும் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
 


Share :        

VISITORS : 349081