அரசியல்

ரோஜ்கர் மேளாவில் 71,000 பேருக்கு வேலை... தமிழ்நாட்டில் சுமார் 400 பேருக்கு பணியாணை

        86

ரோஜ்கர் மேளா திட்டத்தின்படி பயிற்சி பெற்ற சுமார் 71 ஆயிரம் பேருக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி ஆணைகள் வழங்கப்பட்டன. காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட விழாவில், தமிழ்நாட்டில் நானூறுக்கும் மேற்பட்டோருக்கு பணியாணைகள் வழங்கப்பட்டன.

நாடு முழுவதும் 10 லட்சம் இளைஞர்களுக்கு முறையாக பயிற்சி அளித்து, காலியாக உள்ள மத்திய அரசுத்துறை பணியிடங்களை நிரப்பும் வகையில், ரோஜ்கர் மேளா எனும் திட்டத்தை மத்திய அரசு கடந்தாண்டு கொண்டு வந்தது. அந்த வகையில், நாடு முழுவதும் இத்திட்டத்தில் பயிற்சி பெற்ற சுமார் 75 ஆயிரம் பேருக்கு கடந்த அக்டோபரில் பணி ஆணைகள் வழங்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் சுமார் 71 ஆயிரம் பேருக்கு பணி ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதனை பிரதமர் மோடி காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு மத்திய அமைச்சர்கள் பணி ஆணைகளை வழங்கினர்.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் 400க்கும் மேற்பட்டோருக்கு மத்திய அமைச்சர்கள் பணியானைகளை வழங்கினர்.

அதன்படி, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற ரோஜ்கர் மேளா நிகழ்ச்சியில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கலந்து கொண்டு 116 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார்.

ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இமேஜ் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரோஜ்கார் மேளா திட்டத்தின் கீழ் பயிற்சி முடித்தவர்களுக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி 86 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார்.

திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்று 129 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார்.

கோவை இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மத்திய சமூக நீதி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் அப்பையா நாராயணஸ்வாமி கலந்துகொண்டு 96 பேருக்கு பணியாணைகளை வழங்கினார்.

பின்னர், நாடு முழுவதும் பணியாணைகளை பெற்ற இளைஞர்களிடையே காணொளி வாயிலாக பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, பணியாணைகளை பெற்றவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

நாட்டில் நல்லாட்சி நடந்து வருவதற்கான அடையாளம்தான் இந்த நிகழ்வு என கூறிய பிரதமர், தாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேறி வருவதற்கு இந்த நிகழ்ச்சியே சான்று என்றும் தெரிவித்தார்.

பணி நியமனங்கள் முழு வெளிப்படைத்தன்மையோடு நடைபெற்றதாக கூறிய பிரதமர் மோடி, புதிதாக வேலைவாய்ப்பை பெற்றவர்கள் இதனை வேலையாக கருதாமல், மக்கள் சேவையாக நினைத்து உழைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.


Share :        

VISITORS : 348870