நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே, கூண்டில் சிக்கிய கரடியை வனத்துறையினர் அடர் வனப்பகுதியில் விடுவித்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
நெசவாளர் காலனி அக்னி சாஸ்தா கோவில் அருகே கடந்த 20-ந் தேதி முதல் இரவு நேரங்களில் உலா வந்த கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்து வந்தனர்.
இதனால் பொதுமக்கள் இந்த கரடியை கூண்டு வைத்து பிடிக்குமாறு வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் இளையராஜா உத்தரப்பின்படி நெசவாளர் காலனி அக்னி சாஸ்தா கோவில் முன்பு வனத்துறை சார்பில் கரடியை பிடிப்பதற்காக கூண்டு வைத்து இரவு நேரங்களில் வனத்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு கரடியை கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் வனத்துறையினர் வைத்த கூண்டில் கரடி சிக்கியது.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி வந்த கரடி கூண்டில் சிக்கியதை காண பொதுமக்கள் அங்கு திரண்டு வந்திருந்தனர்.
தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் உதவியுடன், கரடியை அம்பை மேற்குத்தொடர்ச்சி மலையில் அடர் வனப்பகுதியில் விட்டனர்.