செய்யாத குற்றத்திற்காக 46 ஆண்டுகளாக சிறையில் இருந்த முதியவர்.. மரண தண்டனையை வென்று வெளியே வந்தது எப்படி? நடந்தது என்ன?
1966-ஆம் ஆண்டில், ஜப்பான் உள்ள நிறுவனமொன்றின் உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் 3பேரை கத்தியால் குத்தி கொடூரமாக கொலைசெய்யப்பட்ட வழக்கிலும், அவர்களது வீட்டிற்கு தீவைத்த வழக்கிலும் இவாவோ ஹகமடா என்பவர் மீது குற்றம்சாட்டப்பட்டார். மேலும், அந்த உரிமையாளரின் வீட்டில் இருந்து 20,000 யென் பணத்தை கொள்ளையடித்ததாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இதனையடுத்து தான் குற்றவாளி அல்ல என்று முதலில் மறுத்த ஹகமடா, நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் நீடித்த காவல்துறையின் மிருகத்தனமான விசாரணையில், கட்டாயமாகத் தான் தான் குற்றவாளி என்று ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த வழக்கில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு 1968-ஆம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், நீதி விசாரணை, மேல்முறையீடு, மறுவிசாரணை போன்ற செயல்முறைகள் காரணமாக அவர் தூக்கிலிடப்படவில்லை. விசாரணை பல ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில், ரத்தக்கறை படிந்த ஆடைகளில் இருந்து மீட்கப்பட்ட DNA ஹகமடாவின் டிஎன்ஏ-உடன் பொருந்தவில்லை என நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
தற்போது 88 வயதாகும் ஹகமடா கடந்த 2014-ஆம் ஆண்டு, அவரது வழக்கறிஞர்களின் நியாயமான வாதத்தாலும், ஹகமடாவின் வயது காரணமாகவும், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால், மறுவிசாரணைக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது. இதன்காரணமாக, ஹகமடா வழக்கில் இருந்து விடுவிக்கப்படாத நிலையில், தொடர்ச்சியாக விசாரணை நடந்துவந்தது.
மறுவிசாரணைக்கு ஹகமடா ஆஜராகவில்லை என்றாலும் கூட, அவரது 91 வயதான சகோதரி ஹிடெகோ தனது சகோதரனுக்காக நீண்ட போராட்டத்தை நடத்தினார். தற்போது அவர், குற்றவாளி அல்ல என ஷிசுவோகா மாவட்ட நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதி கோஷி குனி, இந்த வழக்கில் பல பொய்யான தகவல்களை நீதிமன்றம் ஒப்புக்கொண்டதாகவும், ஹகமடா குற்றவாளி அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
தொழில்முறை குத்துச்சண்டை வீரராக இருந்த ஹகமடா தனது 46 ஆண்டுகளை சிறையில் கழித்துள்ளார். மரண தண்டனையை எதிர்நோக்கி அதிககாலம் சிறையில் கழித்த நபராக ஹகமடா அறியப்படுகிறார். ஹகமடா விடுவிக்கப்பட்டதன் மூலம், போருக்குப் பிந்தைய ஜப்பானின் குற்றவியல் நீதித்துறை வரலாற்றில், மறுவிசாரணையில் குற்றமற்றவராக நிரூபிக்கப்பட்ட ஐந்தாவது நபராக ஹகமடா உள்ளார். இந்த வழக்கு மரண தண்டனையை ரத்து செய்வது பற்றிய விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.