இந்தியா - சீனாவுக்கு இடையே வர்த்தகம், எல்லை பிரச்சனை என முட்டல் மோதல் இருந்து வரும் நிலையில், இந்தியாவுக்கு பலத்த அடியை தர மெகா அணை கட்டுவது என்ற புதிய யுக்தியை சீனா கையிலெடுத்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு? இந்தியா மீது மறைமுகமாக போர்த்தொடுக்க முயற்சிக்கிறதா சீனா? என்பது குறித்து விரிவாபார்ப்போம்...
சீனா உரிமை கொண்டாடும் யார்லங் ஸாங்போ நதி திபெத்திய பீடபூமியில் பாய்கிறது. இதே நதி இந்தியாவில் பிரம்மபுத்திரா என்ற பெயரில் பாய்ந்தோடுகிறது. தற்போது திபெத்திய தன்னாட்சி பிராந்தியத்தில் இருக்கும் யார்லாங் ஸாங்போ அதாவது இந்தியாவில் அழைக்கப்படும் பிரம்மபுத்திரா நதிக்கு குறுக்கே சீனா மெகா அணை கட்டும் பணியை தொடங்கியுள்ளது.
பிரம்மபுத்திரா நதியில் மெகா அணை கட்டும் தொடக்க விழாவை சீன அரசும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கை இந்தியாவுக்கும், வங்கதேசத்துக்கும் அச்சத்தையே ஏற்படுத்தியுள்ளது. புரம்மபுத்திரா நதியில் மெகா அணையை கட்டினால், நதிக்கு கீழ் பகுதியில் இந்தியா மற்றும் வங்கதேச எல்லையோரம் வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
தற்போது கட்டி வரும் உலகின் மிகப்பெரிய அணையில் இருந்து மின் உற்பத்தி செய்ய சீனா திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் திபெத்திய கிராம பகுதிகளில் வசிக்கும் மக்களின் மின் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என சீன அரசு விளக்கும் அளித்துள்ளது.
மக்களின் மின் தேவைக்காக இந்த அணையை கட்டினாலும், திபெத்திய பீடபூமியில் வசிக்கும் இந்தியாவை சேர்ந்த மக்களை அழிக்கும் முயற்சியையே சீனா மேற்கொண்டுள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.
சீனா தனது திட்டப்படி மெகா அணையை கட்டி முடித்தால் இந்தியாவின் அருணாச்சல பிரதேசம், அசாம், வங்கதேச மாநிலங்களில் மோசமான பாதிப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது. இதுகுறித்து ஊடங்களுக்கு பேட்டியளித்த அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு, சீன அரசு புதிய அணையை கட்டினால் லியாங், பிரம்மபுத்திரா நதிகள் வரண்டு போகும் வாய்ப்புள்ளது.
அப்படி நீராதாரம் இல்லாமல் போனால் அதை நம்பி வாழும் பழங்குடியின மக்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். ஒரு குறிப்பிட்ட சமூகமே அழியும். இப்படிப்பட்ட அழிவையே அணை என்ற பெயரில் சீனா மேற்கொண்டு வருகிறது. இது இந்தியாவுக்கு எதிராக சீனா நடத்தும் வாட்டர் வெடிகுண்டு என பேசியுள்ளார்.
இது ஒருபக்கம் இருக்க, அணையின் கட்டுமான பணிக்காக நதியில் இருந்து அதிகளவில் நீரை வெளியேற்றினால் நதியோரம் வசிக்கும் மக்கள் வெள்ளத்தில் அழியும் அபாயம் உள்ளது, அதிக உயிரிழப்புகளும் ஏற்படும் எனவும் பெமா காண்டு எச்சரித்துள்ளார்.
சீனாவின் புதிய அணை திட்டத்துக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பினாலும், திபெத்திய பிராந்தியத்தில் அணை கட்டுவது தனது உரிமை என சீனா பிடிவாதம் பிடித்து வருகிறது. இதன்மூலம், வெறும் மின் உற்பத்திக்காக மட்டுமே சீனா புதிய அணையை கட்டவில்லை என்றும் இதன் பின்னணியில் பெரிய அரசியல் திட்டமே உள்ளதாகவும் பார்க்கப்படுகிறது.
அதாவது சீனா அணை கட்டும் பகுதியில் உலகின் மிக ஆழமான மற்றும் நீளமான பள்ளத்தாக்கு உள்ளது. இதன் வழியாக யு வடிவில் பிரம்மபுத்திரா நதி பாய்கிறது. பிரம்மபுத்திரா நதி நம்சா பார்வா மலை பகுதியில் யு வடிவில் பாய்வதால் தி கிரேட் பெண்ட் என்று அழைக்கப்படுகிறது.
இந்தியாவின் அடையாளமாக இருக்கும் இயற்கையின் இந்த எழிலை அழிக்கும் நோக்கமே சீனாவின் திட்டம் எனவும் குற்றம்சாட்டப்படுகிறது. இதனால் முதலில் நம்சா பார்வா மலையை குடைந்து அங்கிருந்து தண்ணீரை திருப்பி விட நடவடிக்கை எடுத்து வருகிறது.
இப்படி திருப்பிவிடும் நீரின் மூலம் உற்பத்தியாகும் மின்சாரங்கள் மெட்ரோ நகரங்களின் மின் தட்டுப்பாட்டை போக்கும் என்றும் சாக்குப்போக்கு கூறி வரும் சீனா, மறைமுகமாக இந்தியாவின் திபெத் பகுதியை அழிக்கும் ஆயுதத்தையே கையிலெடுத்துள்ளது.
இதற்கெல்லாம் மேலாக சீனா மெகா அணை கட்டும் திபெத் நதி பகுதி அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாகவும் உள்ளது. அங்கு கட்டப்படும் பிரமாண்ட அணை நிலநடுக்கத்தால் உடைந்தால் நதியோரம் வசிக்கும் மக்களுக்கும், இயற்கை வளங்களுக்கும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்றும் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
திபெத் நிலப்பரப்பு மூலம் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கவே இப்படி ஒரு அணையை சீனா கட்டி வருவது எச்சரிக்கை மணியாகவே பார்க்கப்படுகிறது. சீனாவின் இந்த நடவடிக்கையை தடுக்க இந்தியா எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன என்பதே கேள்விக்குறியாக உள்ளது.