தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியும் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக, தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் கூறி உள்ளார்.
தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் அர்னாப் புயல் உருவாக வாய்ப்பு என்று, இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது என்றும், காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
5 மாவட்டங்களில் மிக கனமழை
நெல்லை,குமரி, கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு என்று, ஐந்து மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது
இந்நிலையில், கனமழை காரணமாக நீலகிரியில் உள்ள 6 வட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டது. உதகமண்டலம், குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை பெய்து வருவதால் கோவை, நீலகிரியில் பள்ளி மாணாக்கர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று, சனிக்கிழமையான இன்று ஏற்கனவே விடுமுறை என்ற நிலையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
கனமழை பெறும் மாவட்டங்கள்
கரூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்து உள்ளது.
ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிவகங்கை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
அதிகபட்சமாக பர்லியாரில் 25 செ.மீ மழை
நீலகிரியில் அதிகபட்சமாக பர்லியாரில் 25 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 69 புள்ளி 44 செ.மீ மழை பதிவானதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
நீலகிரியில் கனமழை காரணமாக சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி செல்லும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.