Also Watch
Read this
By: Manigandan Raja

திரைப்படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி வரவேற்பு :
ஜெயராம், ஊர்வசி நடித்துள்ள "பரிமளா அண்ட் கோ" திரைப்படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில், ஜெயராம், ஊர்வசியுடன் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, மிஷ்கின், சாண்டி, யோகி பாபு, சந்தோஷ் சோபன், அனந்திகா உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்தன.
இசைஞானி இளையராஜாவின் "வேலியண்ட்" முதல் சிம்பொனி :
இசைஞானி இளையராஜாவின் முதல் சிம்பொனி ஜூன் 1-ம் தேதி அனைத்து ஆடியோ தளங்களிலும் வெளியாகவுள்ளது. "வேலியண்ட்" என பெயரிடப்பட்ட தனது சிம்பொனி இசையை இளையராஜா லண்டனில் கடந்தாண்டு மார்ச் மாதம் அரங்கேற்றம் செய்தார்.
தொடர்ந்து, தனது ரசிகர்கள் கேட்பதற்காக சென்னையில் வரும் மே 30-ம் தேதி சிம்பொனியை அரங்கேற்றம் செய்வதாக அறிவித்திருந்தார். இந்த சூழலில், இளையராஜாவின் "வேலியண்ட்" சிம்பொனி அனைத்து ஆடியோ வெளியீட்டு தளங்களிலும் ஜூன் 1-ம் தேதி வெளியாகும் என மெர்குரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கேன்ஸ் விழாவில் மகளுடன் நடிகை ஐஸ்வர்யா ராய் அசத்தல் :

கேன்ஸ் விழாவில் முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பங்கேற்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி வருகிறது.
விழாவில், நீல நிற மாடர்ன் கவுன், ஸ்டைலிஷான சிகை அலங்காரம், தனித்துவமான அணிகலனை அணிந்து பறக்கும் முத்தங்களை பறக்க விட்டபடி சிவப்பு கம்பளத்தில் ஒய்யாரமாக நடந்து வந்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார்.
பின்னர், சில மணி நேரங்களுக்கு பிறகு பிங்க் நிற ஆடையுடன் தனது மகள் ஆராத்யா பச்சனுடன் கேன்ஸ் விழாவில் பங்கேற்றார். அவர் சிவப்பு நிற உடை அணிந்து தாயுடன் இணைந்து நடந்து வந்தார்.
கேஜிஎப் -3" பற்றி யோசிக்கவே பல ஆண்டுகளாகுமாம் :

"கேஜிஎப்- 3" திரைப்படம் குறித்து யோசிக்கவே இன்னும் பல ஆண்டுகளாகும் என இயக்குநர் பிரசாந்த் நீல் கூறியுள்ளார். "கேஜிஎப்" 1 மற்றும் 2-ம் பாகங்கள் இந்தியாவை தாண்டி உலகளவில் வசூலில் மாபெரும் சாதனை படைத்தன.
இதனால், 3-ம் பாகம் அறிவிப்பு குறித்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்த சூழலில், ஜூனியர் என்.டி.ஆர்.-ஐ வைத்து "டிராகன்" படத்தை இயக்கி வரும் பிரசாந்த் நீல், தொடர்ந்து, பிரபாஸை வைத்து "சலார் -2" படத்தை இயக்கப்போவதாகவும், கேஜிஎப் 3-ம் பாகத்திற்கு அதிக காலமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
திரைப்படம் வெளியான 58 மணி நேரத்தில் வசூல் சாதனை :

நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான "திரிஷ்யம் - 3" திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. நடிகர் மோகன்லால் - இயக்குநர் ஜீத்து ஜோசஃப் கூட்டணியில் உருவான இந்த படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்கும் விதமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.
எனினும், படத்தின் மீதான ஆர்வம் காரணமாக பெரியளவில் டிக்கெட் முன்பதிவுகள் நடைபெற்றதால், முதல்நாளிலேயே 45 கோடி ரூபாய் வரை வசூலித்தது. இந்த சூழலில், 58 மணி நேரத்தில் 100 கோடி ரூபாய் வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved