பொள்ளாச்சியில், பிரசித்தி பெற்ற கரிவரதராஜ பெருமாள் கோயிலில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. பொள்ளாச்சியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த கரிவரதராஜ பெருமாள் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள், பெருமாளை தரிசித்து வருகின்றனர். இங்கு, ஆண்டு தோறும் மூன்று முறை பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை எண்ணும் பணி நடைபெறுவது வழக்கம். கடந்த ஜூன் மாதத்திற்கு பிறகு இன்று நிரந்தர உண்டியல்கள் திறக்கப்பட்டு, எண்ணும் பணி நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் கோகிலா வாணி, செயல் அலுவலர் தமிழ்செல்வன், அறங்காவலர் குழு தலைவர் கோ.சி.மணிகண்டன் உள்ளிட்ட அறங்காவலர்கள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. இதில், தங்கம் 54 கிராம், வெள்ளி 75 கிராம் மற்றும் 1,39,355 ரூபாய் பக்தர்கள் உண்டியலில் செலுத்தியிருந்தனர். இந்தப் பணியில் கோயில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.