Also Watch
Read this
By: Web Team

தவெக மாநாட்டில் அமைக்கப்பட்டிருந்த 100 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பம் சரிந்து விழுந்து, விபத்து ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் பாரபத்தில், விஜய் தலைமையில் தமிழக வெற்றி கழகத்தின் 2ஆவது மாநில மாநாடு நாளை நடைபெற உள்ளது. சுமார் 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் மாநாட்டு திடல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த முறை, விக்கிரவாண்டியில் நடந்த சிறு தவறு கூட நடைபெறாமல் இருக்க, இந்த முறை மும்மடங்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
நாளை மாலை தவெக மாநில மாநாடு தொடங்க உள்ளது. தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், 100 அடி உயரம் கொண்ட கொடிக் கம்பத்தில் அக்கட்சியின் கொடியை ஏற்றி வைக்க உள்ளார்.
இதற்காக மாநாட்டு மேடையின் முன்புறம், கொடிக்கம்பம் அமைக்கும் பணிகளில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஈடுபட்டு வந்தனர்.
இந்த சூழலில் இன்று நண்பகல், மாநாட்டு திடலில் 100 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பம், திடீரென நிலை தடுமாறி சாய்ந்து விழுந்தது.
இதனை கண்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அலறியடித்து கொண்டு ஓடினர்.
மேலும், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த காரின் மீது, கொடிக் கம்பம் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
கொடிக் கம்பம் சரி செய்யப்பட்ட பின்னர், 100 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பம் அமைக்கும் பணி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முழுவீச்சில், மும்முரமாக ஏற்பாடுகள்:
பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களுக்கு வழங்க குடிநீர், மருத்துவம், கழிவறை மற்றும் பார்க்கிங், சிற்றுண்டி வசதி உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
கள்ளக்குறிச்சி, விழுப்புரம் , புதுக்கோட்டை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களை சேர்ந்த தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் தலைமையில் மாநாட்டு திடலை சுற்றி ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டு மாநாட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ள நிலையில் போக்குவரத்து மாற்றம் மற்றும் மதுரை மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved