கம்போடியாவில் நடந்த உலக அழகி போட்டியில் ரன்னர்-அப் இடத்தைப் பிடித்து, நாட்டுக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்திருக்கிறார் நாகையைச் சேர்ந்த திருநங்கை ஒருவர். 30 நாடுகள் பங்கேற்ற போட்டியில் கலந்துகொண்டு மகுடம் சூடியிருக்கும் ரஃபியா என்ற திருநங்கைக்கு பாராட்டு குவிந்து வருகிறது. லட்சியத்தை மட்டுமே நோக்கி ஓடிய ரஃபியா, இன்று தன்னை கேலியும் கிண்டலும் செய்தவர்களை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். நாகூரைச் சேர்ந்த விவசாயி முத்துகிருஷ்ணன் - தமிழரசி தம்பதிக்கு பிறந்த ரஃபியாவுக்கு, 9ஆம் வகுப்பு படிக்கும் போது உடலில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதைத் தொடர்ந்து கோவையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி வளர்ந்து வந்த ரஃபியா, அழகு கலை மீது ஆர்வம் கொண்டு பெங்களூருவில் ப்யூடிஷன் படிக்கச் செல்கிறார். அங்கு படிக்கும் போதே ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்று, கன்னட படங்களில் திருநங்கை வேடத்திலேயே நடிக்க தொடங்குகிறார். அவரது ஆர்வம் மாடலிங் பக்கம் திரும்புகிறது. இதனால், அழகிப் போட்டிகளில் பங்கேற்க தொடங்கிய ரஃபியா, மிஸ் புனே, க்ளோபல் குயின், ட்ரான்ஸ் பிளாட்டினம், மிஸ் இந்தியா பட்டங்களையும் வென்றிருக்கிறார். இந்நிலையில் தான் கடந்த 13ஆம் தேதி தொடங்கி, கம்போடியா நாட்டில் நடந்து வந்த மிஸ், மிஸ்டர் மற்றும் திருநங்கைகளுக்கான மெஜஸ்டிக் உலக அழகிப் போட்டிகளில் பங்கேற்கிறார். பெண்கள் பிரிவில் போட்டியிட்ட ரஃபியா, 10 சுற்றுகளைக் கடந்து டாப் 9 அழகிகளில் ஒருவராக தேர்வானார். இறுதிப் போட்டியின்போது நடை, உடை, பாவனையில் மட்டுமல்லாது, சமூக நலன் சார்ந்த கேள்விகளுக்கும் க்ரிஸ்ப் ஆக பதில் கொடுத்து மூன்று அழகிகளில் ஒரு அழகியாக மாறுகிறார். தொடர்ந்து ரன்னர்-அப் ஆக தேர்வாகி, மிஸ் மெஜஸ்டிக் உலக அழகியாக பட்டம் வெல்கிறார். திருநங்கைகளுக்கு மட்டுமல்லாது, ஆண்கள், பெண்கள் என எல்லோருக்குமான முன்னுதாரணமாக உலக அரங்கில் உயர்ந்து நிற்கிறார்.