சட்டமன்ற தேர்தலுக்கு, இன்னும் 3 மாதங்களே இருக்கும் நிலையில், எதிர்பார்த்தபடியே அதிமுக - பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பாமகவுக்கு 18 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட்டு ஒதுக்க அதிமுக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியான நிலையில், பாமகவுடன் கூட்டணி ஒப்பந்தத்தை முடித்த கையோடு EPS டெல்லிக்கு பயணமாகியிருப்பது தேர்தல் சூட்டை எகிறச் செய்திருக்கிறது.திமுகவுக்கு எதிரான அணி, வலுவாக மாறி வருகிறது என்பதற்கான சிக்னலாக அதிமுக கூட்டணியில் பாமக இணைந்திருக்கும் நிலையில், அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்லுவார்கள். அப்படி புதன்கிழமையாக பார்த்து அதிமுக - பாமக இடையேயான கூட்டணி உறவு உறுதி செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் இருந்தது போலவே, அதிமுக தலைமையிலான அணியில் பாமக ஐக்கியமாகியிருக்கிறது. காலையிலேயே பசுமை வழிச்சாலையிலுள்ள EPS வீட்டுக்கு புறப்பட்டுச் சென்ற அன்புமணி, ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு கூட்டணியை உறுதி செய்திருக்கிறார்.நீண்ட நாட்களாக எடப்பாடி பழனிசாமியும், அன்புமணியும் திரை மறைவில் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தி வந்த சூழலில், தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்ப ட்டுள்ளது. பேச்சுவார்த்தையின் போதே எத்தனை தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட இருக்கிறது என்பதும் முடிவு செய்யப்பட்டு விட்டதாம். அந்த வகையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், வருகிற தேர்தலில் 18 சட்டமன்ற தொகுதிகளும் ஒரு ராஜ்ய சபா சீட்டும் ஒதுக்க எடப்பாடி பழனிசாமி முன் வந்திருக்கிறார் என சொல்லப்படுகிறது.கடந்த முறையை விட இந்த முறை குறைந்த தொகுதிகள் என்றாலும், 2026 மார்ச்சிலேயே போனஸாக ராஜ்ய சபா சீட்டும் கிடைப்பதால் அன்புமணி தரப்பில் ஒப்புக் கொண்டதாக சொல்கிறார்கள். அதோடு, பாமகவுக்கு 100 சதவீதம் வெற்றி என கருதப்படும் மிக மிக வலுவாக இருக்கும் தொகுதிகளை மட்டுமே கேட்டு பெற வேண்டும் என்ற முடிவில் தான் 18 தொகுதிகளோடு சுருக்கிக் கொண்டதாக சொல்லப்படும் நிலையில், எந்தெந்த தொகுதிகள்? என்பதை மார்கழி முடிந்து தை மாதம் பிறந்ததும் வருகிற 17ஆம் தேதி அறிவிக்க வாய்ப்பு எனவும் பேசிக் கொள்ளப்படுகிறது.இந்த நிலையில், கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் அன்புமணியும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, எங்கள் கூட்டணி இயற்கையான கூட்டணி என்ற எடப்பாடி பழனிசாமி, இன்னும் பல கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வரும் என நம்பிக்கை தெரிவித்தார்.மக்கள் விரோத திமுக அரசை அகற்ற அதிமுகவுடன் கை கோர்த்து இருப்பதாக கூறிய அன்புமணி, நிச்சயம் எங்கள் கூட்டணி வெற்றி பெறும் என்றார். அதோடு, திமுக மீது மக்கள் ஆத்திரத்தில் இருக்கிறார்கள் என்ற அன்புமணி, வருகிற தேர்தலில் நிச்சயம் அதிமுக வெற்றி பெற்றுஆட்சி அமைக்கும் என்றார்.அண்மையில் 100 நாட்கள் நடைபயணம் சென்ற அன்புமணி, திமுகவை தான் கடுமையாக விமர்சித்து வந்தார். அப்போதே, அன்புமணி அதிமுக கூட்டணியை தான் தேர்வு செய்வார் என எதிர்பார்க்கப்பட் டது. இருப்பினும், திமுகவை தீவிரமாக எதிர்க்கும் சக்தியாக விஜய்யும் களத்தில் இருப்பதால் த.வெ.க. பக்கம் செல்லவும் வாய்ப்பு என சிறிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில்,அதிமுக தலைமையிலான அணியில் ஐக்கியமாகியிருக்கிறார் அன்புமணி. இதன் மூலம் பாமக வலுவாக இருக்கும் மாவட்டங்களில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாக பார்க்கப்படுகிறது. 2016 தேர்தலில் பாமக தனித்து களம் கண்ட போது, வன்னியர்கள் அதிகளவில் வசிக்கும் வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் பெரும்பாலான தொகுதிகளில் 50 ஆயிரத்திற்கு மேல் வாக்குகள் வாங்கியிருந்தது. இந்த சூழலில் அதிமுகவின் வாக்கு வங்கியுடன், பாமகவின் வாக்கு வங்கியும் சேரும் போது வெற்றிக்கு வழி வகுக்கும் என கணிக்கப்படுகிறது. பாமகவுடன் கூட்டணியை உறுதி செய்த கையோடு எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு விரைந்திருப்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. டெல்லியில் அமித்ஷா, பியூஷ் கோயலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய வாய்ப்பு என சொல்கிறார்கள். ஏற்கனவே, தமிழகம் வந்த அமித்ஷா, 2 நாளாக எஸ்.பி.வேலுமணியை சந்தித்து பேசிய நிலையில், எடப்பாடிபழனிசாமியின் டெல்லி பயணமும் கவனிக்க வைத்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, பாமகவில் தற்போது அன்புமணி, ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், வன்னியர்கள் வாக்கை மொத்தமாக தன் பக்கம் எப்படி ஒருங்கிணைக்க போகிறார் என்பதில் தான் அன்புமணிக்கும் சவால் நிறைந்திருக்கிறது. அதிமுகவுடனான கூட்டணியை அன்புமணி உறுதி செய்திருக்கும் நிலையில், ராமதாஸுக்கு இருக்கும் வாய்ப்புகள் என்னென்ன என்பது குறித்தும் பார்க்க வேண்டியுள்ளது. அந்த வகையில், தனியாக நிற்பது, விஜய் பக்கம் செல்வது, திமுக பக்கம் செல்வது என 3 வாய்ப்பு தான் ராமதாஸுக்கு இருக்கிறது என்றாலும், திமுக கூட்டணியில் திருமாவளவன் இருக்கும் போது ராமதாஸை சேர்த்துக் கொள்ளுமா? திமுக என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனென்றால், பாமக, பாஜக இடம்பெறும் கூட்டணியில் விசிக இடம் பெறாது என திருமாவளவன் சபதமெடுத்திருப்பதால் ராமதாஸை அறிவாலய தரப்புஏற்றுக் கொள்ள வாய்ப்பு இல்லை எனவும் சொல்லப்படுகிறது. இதனால் ராமதாஸ் என்ன முடிவெடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.