trichy
trichy

கிரைண்டருக்கு பின்னால் பம்மிய இளைஞர், SSI வீட்டுக்குள் நடந்த கொடூரம்

திருச்சி, பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவை சேர்ந்தவர் தாமரைச்செல்வன்.
Published on: 

திருச்சியில், தனியார் நிறுவன ஊழியரை கொலை செய்வதற்காக விரட்டிய போது, அவர், காவலர் குடியிருப்புக்குள் ஓடி தப்பிக்க நினைத்த போதிலும், விடாமல் துரத்திச் சென்று வெட்டிப் படுகொலை செய்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவலர் ஒருவரின் வீடு திறந்திருந்த போது அந்த இளைஞர் உள்ளே சென்று பதுங்கிய போதிலும், உள்ளே புகுந்த கும்பல், கொலை செய்த சம்பவத்தால் திருச்சி பதற்றம் அடைந்துள்ளது.
காவலர் குடியிருப்பிலேயே, அதுவும் ஒரு காவலர் வீட்டுக்குள்ளேயே, பட்டப்பகலில் ஒரு இளைஞரை 5 பேர் ஓட ஓட விரட்டி கொலை செய்துள்ளார்கள் என்றால், பொது இடத்தில் மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என்பதே பலரது கேள்வி.
திருச்சி, பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவை சேர்ந்தவர் தாமரைச்செல்வன். ஸ்ரீரங்கம் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணியாற்றிய இவர், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், வழக்கம்போல காலை 8.40 மணியளவில் தனது வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு கிளம்பி சென்றுள்ளார் தாமரைச்செல்வன். பழைய போஸ்ட் ஆபிஸ் சாலை அருகே வந்தபோது அவரை பின்தொடர்ந்து 2 இரு சக்கர வாகனங்கள் வந்துள்ளன.
அதில், பல்சர் பைக்கில் வந்த ஒரு இளைஞர், தாமரைச்செல்வனை வழிமறிக்க, அதன் பின்னால் ஸ்கூட்டியில் வந்த 3 பேர் அரிவாளால் அவரது முதுகிலும், தோள் பகுதியிலும் வெட்டி உள்ளனர். அதனால் அச்சம் அடைந்த தாமரைச்செல்வன், தனது பைக்கை கீழே போட்டுவிட்டு அருகே இருந்த காவலர் குடியிருப்பு காம்பவுண்டுக்குள் ஓடி உள்ளார். அங்கு சென்றால் கொலையாளிகள் அஞ்சி விடுவார்கள் என எண்ணி இளைஞர் அங்கு ஓடினார்.
அங்கு தரைத்தளத்தில் உள்ள ஒரு காவலரின் வீடு திறந்து கிடந்துள்ளது. தில்லை நகர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக உள்ள செல்வராஜின் குடும்பத்தினர் எப்போதுமே தனது வீட்டை உள்பக்கமாக தாழிட்டு கொண்டுதான் இருப்பது வழக்கம். ஆனால், அவரது மகள் குப்பையை கொட்ட சென்றுவிட்டு அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்ததால் வீடு திறந்து கிடந்துள்ளது. அதனால், நாற்காலியில் காவலர் அமர்ந்திருக்க, அவரது மகள் கதவை அடைப்பதற்காக நின்று கொண்டிருந்தார்.
அந்தநேரத்தில் படபடவென ஓடி காவலரின் வீட்டு கிச்சனுக்குள் சென்ற தாமரைச்செல்வன் கிரைண்டருக்கு பின்னால் ஒளிந்துள்ளார். காவலர் குடியிருப்பு என்ற அச்சமே இல்லாமல், திபுதிபுவென காவலரின் வீட்டுக்குள் புகுந்த 5 பேர் கொண்ட கும்பல், கிரைண்டருக்கு பின்னால் பம்மி இருந்த தாமரைச்செல்வனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
தாமரைச்செல்வனின் உயிரை நொடியில் குடித்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளது. அதற்கு முன்பே காவலர் செல்வராஜ் மற்றும் அவரது மகளின் கதறல் சத்தத்தை கேட்டு ஒன்றுகூடிய குடியிருப்பில் இருந்த காவலர்கள் அந்த கும்பலை கல்லை கொண்டு எறிந்து பிடிக்க முயன்றனர்.
ஆனால், அவர்கள் கையில் ஆயுதங்கள் இருந்ததால் அருகிலேயே நெருங்க இயலவில்லை. இருப்பினும், கொலைகார கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞரை மட்டும் கற்களும் கட்டையும் இடறி விழ வைத்தது. மற்ற 4 பேரும் ஓட்டம் பிடித்தனர். பிடிபட்ட திருவானைக்காவல் கொண்டையம்பேட்டை பகுதியை சேர்ந்த இளமாறன் என்ற இளைஞரை மடக்கி பிடித்தனர்.
இதையடுத்து, அங்கு வந்ந காவல் துணை ஆணையர் சிபின் தலைமையிலான போலீசார், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து சோதனை செய்ததோடு பிடிபட்ட இளமாறனிடம் விசாரணை மேற்கொண்டனர்.. அதில்தான், தாமரைச்செல்வனை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக விரட்டி விரட்டி கொடூர கொலை செய்தனர் என்பதும் தெரியவந்தது.
திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளாவதால், குடும்பம் நடத்த தனியார் நிறுவனத்தில் வரும் வருமானம் மட்டும் தாமரைச்செல்வனுக்கு போதவில்லை. அதனால், ரியல் எஸ்டேட்டில் படுதீவிரமாக கவனம் செலுத்தி உள்ளார். அதேபோல், லால்குடி பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார்.
வாடிக்கையாளர்களுக்கு வீடு வாங்கி கொடுக்கும்போதும், நிலத்தை விற்று கொடுக்கும்போதும் கமிஷன் பெறுவதில் சதீசுக்கும், தாமரைச்செல்வனுக்கும் அடிக்கடி முட்டல் மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த கமிஷன் பிரச்சனையில் ஒருமுறை தாமரைச்செல்வன், சதீஷை கன்னத்தில் அறைந்தததாக தெரிகிறது. அந்த அறை தான் தற்போது தாமரைச்செல்வன் உயிரை பறிக்கவே காரணமாக இருந்துள்ளது.
தாமரைச்செல்வன் கதையை முடிக்க நினைத்த சதீஷ், அதனை தனது நண்பரும், தேடப்படும் முக்கிய குற்றவாளியுமான திருவானைக்காவல் பிரபாகரனிடம் சொல்லி பிளான் போட வைத்துள்ளார். பின்னர், பிரபாகரன் தனது நண்பர்களான மோகன், நந்து, இளமாறன் ஆகியோரை கூட்டு சேர்த்துள்ளார். இதையடுத்து கடந்த 3 நாட்களாக தாமரைச்செல்வனை சதீசும் அவரது கூட்டாளிகளும் பின்தொடர்ந்து சென்றுள்ளார். ஆனால், முதல் இரண்டு நாட்கள் சரியான இடத்தில் சரியான நேரத்தில் தாமரைச்செல்வன் சதீசின் கையில் சிக்காத நிலையில் 3 ஆவது நாளில் காவலர் குடியிருப்பின் அருகே சிக்கி உள்ளார். அப்போதுதான் பைக்கை வழிமறித்து ஓட ஓட வெட்டி கொலை செய்துள்ளனர். இதுஒருபுறமிருக்க தப்பி ஓடிய 4 பேரையும் பிடிக்க கண்கொத்தி பாம்பாக தேடுதல் வேட்டையில் இறங்கிய பாலக்கரை போலீசார், கொலை நடந்த ஐந்தே மணிநேரத்தில் பிரபாகரன், சதீஷ், நந்து, கணேஷ் ஆகியோரை உறையூர் பகுதியில் வைத்து சுற்றி வளைத்து கையில் காப்பை மாட்டினர்..
400 காவலர்கள் குடியிருக்கும் காவலர் குடியிருப்புக்கு செல்ல பீமநகரில் ஒரு கேட்டும், மாசிங்பேட்டையில் ஒரு கேட்டும் உள்ளது. இந்த 2 கேட்டுகளிலுமே பாதுகாப்புக்கு ஒரு செக்யூரிட்டிகூட இல்லை. இதனால் பொதுமக்கள் பலரும் அந்த குடியிருப்பு பாதையை பொதுப்பாதை போன்று பயன்படுத்தி வருகின்றனர். அதேபோன்று அங்கு சிசிடிவி கேமராக்களும் இல்லை. அதுவும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு வசதியாகவே உள்ளது. காவலர்கள் குடியிருக்கும் பகுதியிலேயே போதிய வசதிகள் இல்லை என்றால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் என்ன செய்யும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, திருச்சி அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள், எஸ்சிஎஸ்டி பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும், தாமரைச்செல்வனின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும்கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
இதுகுறித்து பேசிய தாமரைச்செல்வனின் தாய், யாரிடமும் எந்த வம்பு தும்புக்கும் செல்லாத தனது மகனின் உயிரை பத்தே நிமிடத்தில் எடுத்து விட்டார்களே என கதறி அழுததோடு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும் கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய தாமரைச்செல்வனின் மனைவி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, தான் ஒரு கடையில் பணியாற்றியதாகவும், கடையில் இருந்த பணம் தொடர்பாக சதீசுடன் பணப்பிரச்சனை இருந்ததாகவும், அந்த பிரச்சனை அப்போதே தீர்ந்துவிட்டது, ஆனால் அதற்குபிறகு எந்த முன்விரோதமும் இல்லாதபோது எதற்காக கொலை நடந்தது என தெரியவில்லை என கலங்கி பேசினார்.

போலீசாரை தாக்கிவிட்டு கொலையாளி சதீஷ் தப்பியோட முயற்சி

இதனிடையே, தாமரை செல்வன் கொலைக்கு மூளையாக இருந்த சதீஷை, ஸ்ரீரங்கம் மேலூர் அருகே விசாரணைக்கு அழைத்து சென்றனர். அங்கு மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் போலீசாரை தாக்கிய சதீஷ் தப்பியோட முயன்றதாக தெரிகிறது. அப்போது போலீசார் தற்காப்பிற்காக துப்பாக்கியால் சதீஷ் காலில் சுட்டு பிடித்தனர். இதில் காயமடைந்த காவலர்கள் மாதவராஜ் மற்றும் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆகியோர் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

newstamil.tv