சி.பி.ராதாகிருஷ்ணன் VS சுதர்சன் ரெட்டி
இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பாக, குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த அறிவிப்பை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
அகில இந்திய கூட்டணி கட்சிகள் ஒரு பொதுவான வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளன. இந்த முடிவு ஒரு மனதாக எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே பெயருக்கு ஒப்புக்கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது ஜனநாயகத்தில் ஒரு பெரிய சாதனை. ஒரு சிறந்த மனிதரை, சட்டம் தெரிந்த வேட்பாளரை அறிவித்துள்ளோம்.
இவ்வாறு கார்கே தெரிவித்தார்.
ஆந்திர மாநிலத்தின் ரெங்காரெட்டி மாவட்டத்தைப் பூர்விகமாகக் கொண்டவர் சுதர்சன் ரெட்டி. 1946ஆம் ஆண்டு விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், தற்போது 80 வயதை நெருங்குகிறார். ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்தவர்.
2007 முதல் 2011 வரை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர் சுதர்சன் ரெட்டி. குவாஹாட்டி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும், கோவா மாநிலத்தின் முதல் லோக் ஆயுக்தா தலைவராகவும் இருந்தவர்.
ஆம் ஆத்மி ஆதரவு: குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சுதர்சன் ரெட்டியை ஆதரிப்பதில், ஆம் ஆத்மி கட்சி உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் உடன்படுகின்றன என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி டெரெக் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக நிற்கும் சூழலில், எதிர்க்கட்சிகளின் சார்பில் சுதர்சன் ரெட்டி களமிறக்கப்பட்டு உள்ளார்.
